ஆனந்த் பண்டிட் & மோஷன் பிக்சர்ஸ் வழங்கும், தயாரிப்பாளர் சந்துரு தயாரித்து இயக்கும் படம் கப்ஜா (Kabzaa). கேஜிஎஃப் பாணியில் கன்னட சினிமாவின் பிரபல நடிகர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப் உடன் பிரபல நடிகை ஸ்ரேயாவும் நடிக்கிறார்.


முன்னதாக  இந்தப் படத்தின் படக்குழுவினர் கலந்து கொள்ளும் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிலையில் அதில் ஸ்ரேயா நடிகர் சுதீப்,  இயக்குநர் சந்துரு உள்ளிட்டோர்  உடன் கலந்து கொண்டார்.


தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரேயா சரண், ”சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷல் தான். நல்ல அழகான நினைவுகள் இங்கு இருக்கிறது. கப்ஜா கதையை இயக்குநர் சொல்லும்போதே ரொம்ப நல்லா இருந்தது.


வெற்றிக்கு மொழி முக்கியமல்ல


இந்தப் பாடல் எடுக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. காரணம் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. ஆனாலும் பாடல் நன்றாக வந்துள்ளது. என்னை அழகாகக் காண்பித்த ஒளிப்பதிவாளருக்கு நன்றி. நானும் இது போன்ற படத்தில் இருப்பது மகிழ்ச்சி. இந்தப் படம் சிவராத்திரி ஸ்பெஷலாக இருக்கும். இந்தப் படம் வெற்றி பெற இறைவனை வேண்டி கொள்கிறேன்.


பான் இந்தியா படம் என்பது ரொம்ப நல்ல விஷயம். வெற்றிக்கு மொழி என்பது முக்கியமல்ல. இந்தப் படத்தில் எல்லாரும் கடினமாக உழைத்திருக்கிறோம். எல்லோரும் தியேட்டர்களில் சென்று படத்தை பாருங்கள்” என்றார்.


ராஜமௌலி பிடிக்கும்


தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் படத்தில் சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்து கதாபாத்திரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இதுவும் ஒருவிதமான அனுபவம். எனக்கு ராஜமௌலி சார் ரொம்ப பிடிக்கும் என பதில் அளித்தார்.


மேலும், ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு பிறகு தமிழில் நடிப்பது குறித்து பேசியவர், “கொரோனா காலத்திற்கு பிறகு நடிப்பது குறைந்ததாக சொல்கிறார்கள். தமிழில் நல்ல கதைகள் வந்தால் நடிக்க ஓகே தான்” என பதில் அளித்தார். 


”திருமணத்திற்கு பிறகு எல்லோரும் கதாநாயகி சார்ந்த படமாக நடிப்பார்கள். ஆனால் நீங்கள் கதாநாயகன் சார்ந்த படமாக நடிக்கிறீர்களே”  என்ற கேள்விக்கு, ”அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. கதை நன்றாக இருந்தால் நல்லது தான். மொழி என்பது முக்கியமல்ல” என்றார்.


தமிழில் நடிக்க ரெடி


தமிழில் நீண்ட காலமாக நடிக்கவில்லையே என்ற கேள்விக்கு, ”முன்பு போல  மீண்டும் அன்பும், ஆதரவும் கொடுங்கள். நான் தமிழில் படங்கள் நடிக்க ரெடி தான்” என்றார்.


மேலும், “ரஜினிகாந்த் சாருடன் நடிக்க யாருக்கு தான் ஆசை இருக்காது. அவர் சிறந்த மனிதர். அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளலாம். அவருடன் சேர்ந்து நடித்தது ரொம்ப நல்ல அனுபவம். சந்தோஷமாக இருந்தது.” என்றார்.


நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் சந்துரு, ”தமிழில் கொஞ்சம் கொஞ்சம் பேசுறேன். சிவராத்திரி ஸ்பெஷலாக இந்தப் பாடலை எடுத்துள்ளோம். தமிழ்நாட்டின் கலாச்சாரம் தான் இந்தியாவில் சிறந்தது.


கன்னடத்தில் பல படங்களை பண்ணியிருந்தாலும், சவாலான படங்களை எடுத்து பண்ண வேண்டும் என்று எப்போதும் நினைப்பேன்” என்றார். மார்ச் 17ஆம் தேதி வெளியாகும் கப்ஜா படம் கேங்ஸ்டர் படமென்றும், இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.