தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்து தனக்கென இன்றளவும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகை ஸ்ரேயா சரண். 


2018ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் எனும் ரஷ்ய டென்னிஸ் வீரரை திருமணம் செய்து கொண்டு ‘ராதா’ எனும்பெண் குழந்தைக்கு கடந்த ஆண்டு தாயானார்.


ஸ்ரேயா கருவுற்றிருந்தது ஊடக வெளிச்சத்துக்கே வராத நிலையில், திடீரென தனக்கு குழந்தை பிறந்ததை அறிவித்து தனது ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.


குழந்தைப் பேறுக்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் ஸ்ரேயாவின் ‘த்ரிஷ்யம் 2’ இந்தி திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.


 






இந்நிலையில் தான் கருவுற்றிருந்தது குறித்து அறிவிக்காதது ஏன், குழந்தை, கரியர் இரண்டையும் கையாள்வது ஆகியவை பற்றி ஸ்ரேயா தற்போது மனம் திறந்துள்ளார்.


”நான் கருவுற்றது குறித்து நான் பேசாமல் இருந்ததற்கு முக்கியக் காரணம் என்னவென்றால் நான் என் நேரத்தை என்னுடன் செலவிட விரும்பினேன். ராதா என் வயிற்றில் ஆறு மாத குழந்தையாக இருந்த  நிலையில், பருமனாக இருக்க வேண்டும், எதைப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். 


ஆனால் இன்னொரு வலுவான காரணம் இருந்தது. நான் கருவுற்றது குறித்து பேசினால் மீண்டும் எனக்கு வேலை கொடுக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள் என நான் பயந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.


நான் பணியாற்றுவது காட்சி ஊடகம் என்பதால் நான் ஒரு குறிப்பிட்ட தோற்றத்தில் இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே நான் அப்படி செய்தேன். நான் மீண்டும் வந்து கருவுற்றதை அறிவித்தபோது என் எடையைக் குறைத்திருந்தேன். வேலை செய்து கொண்டிருந்தேன். அதனால் ஏற்கனவே 3 படங்களில் ஒப்பந்தமாகிவிட்டேன். 


அந்த அழுத்தம் இருக்கிறது. இது ஒரு காட்சி ஊடகம். ”உங்களுக்கு ஒரு குழந்தை இருப்பதால் நீங்கள் எப்படி நடிக்கப் போகிறீர்கள்?’ என்ற கேள்வியை எந்த நடிகரிடமும் கேட்பதில்லை.


கடின உழைப்பாளி பெண்கள் அனைவரும் தங்கள் குழந்தைகள் நலமாக இருப்பதை உறுதி செய்துகொண்டு ஆண்கள் வேலைக்குச் செல்வதையும் உறுதிசெய்கிறார்கள். 


பொதுவாக குழந்தை வளர்ப்பில் பெற்றோர் இருவருக்கும் சமபங்கு உண்டு. ஆனால் பெண்களிடம் மட்டுமே இந்தக் கேள்வியை இடைவிடாமல் கேட்கிறார்கள். நான் கர்ப்பமாக இருந்தது யாருக்கும் தெரியாது என்பதால் என்னிடம் இந்தக் கேள்வியை கேட்கவில்லை.


’த்ரிஷ்யம்’ படக்குழுவினர் என்னிடம் மிகவும் இனிமையாக நடந்து கொண்டனர். கோவாவில் படப்பிடிப்பின்போது ராதா என்னுடன் இருப்பதை அவர்கள் எப்போதும் உறுதி செய்து கொண்டார்கள். அவர்கள் எனக்கு முழு ஆதரவையும் வழங்கினர்” எனத் தெரிவித்துள்ளார்.