சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் அபினயுடன் யூட்யூப் சேனல் ஒன்றின் நேர்காணல் வழியாக உரையாடியிருக்கிறார் நடிகை ஷெரின். மிகவும் உணர்ச்சிப்பூர்வமான உரையாடலாக இது மாறியிருக்கிறது.


கடந்த 2002ஆம் ஆண்டு, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியானது ’துள்ளுவதோ இளமை’. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் மூலம் தனுஷ், ஷெரின் முதலானோர் அறிமுகமாகினர். இதில் நடிகர் அபினய் முக்கிய வேடத்தில் நடித்து, அறிமுகமாகி இருந்தார். 'துள்ளுவதோ இளமை’ படத்திற்குப் பிறகு, அபினய் பல்வேறு திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றதாகவும், சில படங்கள் தோல்வியடைந்ததால், அதன் பிறகு அமெரிக்க மாப்பிள்ளை, இரண்டாவது ஹீரோ போன்ற வேடங்களில் மட்டும் நடித்து வந்துள்ளார். 


சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், தன்னுடைய தன் வறுமை நிலை குறித்து பேசி, பார்வையாளர்கள் பலரையும் கண் கலங்க வைத்திருந்தார் அபினய். புற்றுநோய் காரணமாகத் தன்னுடைய தாயின் இறப்பு, வீட்டு வாடகைத் தொகையைக் கட்ட முடியாமல் காரில் உறங்கியது, உணவுக்காக மூன்று வேளையும் அம்மா உணவகத்தைப் பயன்படுத்தியது, அதனால் சுமார் 12 கிலோ எடை குறைந்தது எனத் தன் வாழ்க்கையின் சோகமான பக்கத்தைப் பகிர்ந்திருந்தார் அபினய். தான் டிப்ரெஷனில் இருப்பதாக அதில் இருந்து மீண்டு வருவதாகவும் இந்த நேர்காணலில் கூறியிருந்தார். 


இந்நிலையில் வேறொரு யூட்யூப் சேனலில் நேர்காணல் கொடுத்துள்ளார் நடிகர் அபினய். அவரின் சோகத்தை உணர்ந்து, அவரை ஆறுதல்படுத்தும் விதமாக அவருக்கு நடிகை ஷெரின் பேசிய வீடியோ மெசேஜ் ஒன்று போட்டுக் காட்டப்பட்டது. ‘துள்ளுவதோ இளமை’ வெளியாகி, ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு, ஷெரின் அபினயுடன் உரையாடுவதால் மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாகக் காணப்பட்டார். 



ஷெரின்


 


“நடிகர்களின் வாழ்க்கை கொண்டாட்டமும், வண்ண மயமும் நிறைந்தது என மக்கள் நினைக்கின்றனர். ஆனால் நடிகர்களுக்குப் பல பிரச்னைகள் இருக்கின்றன. அதை நாங்கள் யாரும் வெளிப்படுத்தியதில்லை. நீங்கள் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். டிப்ரஷனில் இருந்து வெளியேறுவதாக சொல்லியிருந்தீர்கள். நீங்கள் மீண்டு வர வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.. முதலில் டிப்ரஷன் இருக்கிறது என்று தெரிந்துகொள்வதே மிகப்பெரிய சவால். நீங்கள் தனியாக இல்லை. உங்கள் மீது என்னைப் போல பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. உங்களுடன் நாங்கள் நிற்கிறோம். அதனால் நீங்கள் தனியாக இருக்கிறேன் என்று மட்டும் எப்போதும் நினைக்க வேண்டாம். Stay strong.. Stay positive.. Stay positive என்று என்னால் சொல்ல முடியும்.. ஆனால் அப்படியிருக்க உங்களால் மட்டுமே முடியும். ‘துள்ளுவதோ இளமை’ வெளியான பிறகு, இப்போதுதான் நான் உங்களோடு பேசுகிறேன். அதற்காக மன்னியுங்கள். வாழ்க்கை நம்மை எங்கெங்கோ எடுத்துச் சென்றிருக்கிறது.. பயணங்கள் மாறியிருந்தாலும், இன்னல்கள் ஒன்றுதான்’ என்று அபினயுடன் பேசியுள்ளார் நடிகை ஷெரின். 


இதனைக் கேட்டு கண்கலங்கிய அபினய், ‘நான் மூழ்கிக் கொண்டிருப்பதுபோலவும், என் நண்பர்கள் என்னைத் தனியேவிடாமல், கை கொடுத்து காப்பது போலவும் இருக்கிறது’ என்று உணர்ச்சி ததும்ப இதற்குப் பதிலும் தெரிவித்தார்.