நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் வெற்றி பெற வேண்டும் என நடிகை ஷாலினி அஜித்குமார் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் நாளை உலகமெங்கும் வெளியாக உள்ளது. மாஸ்டர் படத்துக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 2வது முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளதால் ஒட்டுமொத்த திரையுலகமே நாளைய நாளுக்காக காத்திருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் த்ரிஷா, இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி,  அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர்,மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான் என பலரும் நடித்துள்ளனர். 


இதனிடையே லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என நடிகை ஷாலினி அஜித்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ், அனிருத் ஆகியோரை குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் நடிகர் விஜய்யை “தளபதி” விஜய் என ஷாலினி குறிப்பிட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குழந்தை நட்சத்திரமாக இருந்த நடிகை ஷாலினி தமிழ் சினிமாவில் விஜய் நடித்த “காதலுக்கு மரியாதை” படத்தில் தான் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின்னர் இருவரும் ‘கண்ணுக்குள் நிலவு’ படத்தில் இணைந்து நடித்தனர். 






இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்தை காதல் திருமணம் செய்துக்கொண்டு சினிமாவில் இருந்து ஷாலினி விலகி விட்டார். தற்போது சமூக வலைத்தளங்களில் அவர் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கிறார். அதேசமயம் என்னதான் சினிமாவில் அஜித் - விஜய் எதிரெதிர் துருவங்களாக காட்டப்பட்டாலும் திரைக்கு பின்னால் இருவருக்கும் மிகுந்த நட்பு இருக்கிறது. இருவரும் மற்றவர்கள் நடித்த படத்தை பார்த்து விட்டு தங்கள் கருத்துகளை தெரிவிப்பார்கள் என்றெல்லாம் பல பிரபலங்கள் நேர்காணல்களில் தெரிவித்திருப்பதை நாம் காணலாம். தற்போது விஜய் படத்துக்கு அஜித் வீட்டில் இருந்து வாழ்த்து செய்தி வந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.