தமிழ் சினிமாவில் 80ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிககைகளில் குடும்பப் பாங்கான பாத்திரங்களில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. 1985ஆம் ஆண்டு வெளியான 'ஆண்பாவம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சீதா. முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்ததைத் தொடர்ந்து, பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக உன்னால் முடியும் தம்பி, மனசுக்கேத்த மகாராசா, புதிய பாதை, அவள் மெல்ல சிரித்தால் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருந்தார். 


 



திருமணம் முதல் விவாகரத்து வரை :


1989ஆம் ஆண்டு வெளியான 'புதிய பாதை' படத்தில் சீதா நடித்தபோத்ஜ், அப்படத்தை இயக்கிய நடிகர் பார்த்திபன் இருவருக்கும் இடையே காதல் மலர, குடும்பத்தை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் இவர்களுக்கு உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2001ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். 


மனம் திறந்த சீதா :


விவாகரத்துக்குப் பிறகு தனித்து வாழ்ந்து வந்த நடிகை சீதா 2010ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் சதீஷை மறுமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். அவருடன் ஏற்பட்ட திருமண பந்தமும் 6 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தான் நடிகை சீதா நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகர் பார்த்திபன் உடனான காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.


பல பொது இடங்களில் சீதா தான் தன்னிடம் காதலை சொல்லியதாக பார்த்திபன் சொல்லி வந்த நிலையில், அது குறித்த உண்மையைப் பேசி உள்ளார் நடிகை சீதா.


"எங்கள் இருவருக்குமே காதல் உள்ளூர இருந்தது உண்மை தான். ஆனால் நான் காதலை சொல்லி அவர் ஏற்றுக்கொண்டார் என அவர் சொல்வது முற்றிலும் பொய். அவர் தினமும் எனக்கு போன் செய்து “அந்த மூணு வார்த்தையை சொல்லிடுங்களேன்... ப்ளீஸ் அந்த மூணு வார்த்தையை சொல்லிடுங்களேன்” என சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால் அதை நான் அவரிடம் சொல்ல ஒரு வாரம் காலமானது. அதுவரையில் தினம் அதை சொல்ல சொல்லி கேட்டுகிட்டே இருப்பார்.


அப்படி இருந்த சூழலில் ஒரு நாள் நான் அவருடன் போனில் பேசி கொண்டு இருந்தேன். அப்போது நான் 'ஐ லவ் யூ' என சொன்னேன். எனக்கு ஒரு லக் இருக்கு. ஏதாவது நான் தப்பு பண்ணனும் என நினைச்சாலே போதும் நான் மாட்டிக்குவேன். என்னோட ராசியே அந்த மாதிரி தான். நான் நினைக்கக்கூட கூடாது.


அந்த காலத்தில் எல்லாம் இன்டெர் கனெக்ஷன் போன் இருக்கும் இல்லையா? நான் 'ஐ லவ் யூ' என சொல்றேன், எங்க அப்பா கீழே இருக்குற போனை எடுத்து நான் சொன்னதைக் கேட்டு விட்டார். அவ்வளவு தான் முதல் நாள் ஐ லவ் யூ சொன்னதில் இருந்தே பிரச்சினை தொடங்கிவிட்டது. சொல்லு என சொன்னது அவர்.. சொன்னது நான். இதிலிருந்து தெரியுதா யார் லவ் பண்ணது என்பது" எனப் பேசி உள்ளார் சீதா.