உடல் எடை அதிகரித்ததால் வெளியே ஏதாவது சொல்லி விடுவார்கள் என தான் தாழ்வு மனப்பான்மையில் இருந்ததாக நடிகை சரண்யா நாக் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சரண்யா நாக், 2004 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் படத்தில் ஹீரோயின் சந்தியாவுக்கு தோழியாக நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார். தொடர்ந்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் 5 ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். இதன்பின்னர் மழைக்காலம் என்னும் படத்தில் அவர் நிர்வாணமாக நடித்த தகவல் சரண்யா நாக் பற்றிய சர்ச்சையாக அன்றைய காலக்கட்டத்தில் மாற்றியது. 


அதன்பின்னர் சினிமாவில் இருந்து விலகிய சரண்யா நாக் பின்னர் மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் லாபம் படத்தில் பணியாற்றியிருந்தார். இந்நிலையில் சினிமாவில் இடைவெளி விழ என்ன காரணம் என்பதை நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். அதில், “2016 ஆம் ஆண்டில் இருந்து நான் எந்த படமும் பண்ணவில்லை. என்னுடைய ஹார்மோன் பிரச்சினை காரணமாக எதுவுமே பண்ணாம இருந்தேன். ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு பார்த்தோம் என்றால், நடிகைகள் என்றால் உடல் எடை கரெக்டா இருக்கும். கொஞ்சம் அதிகம் என்றால் அதை எப்படி எடுத்துக் கொள்ளுவார்கள் என தெரியவில்லை. எனக்கு தைராய்டு பிரச்சினை இருந்ததால் எடை அதிகரித்தது. மேலும் தாழ்வு மனப்பான்மை அதிகம். வெளில எதுவும் சொல்லிருவாங்களோ, தப்பு தப்பா பேசிருவாங்களோன்னு எதுவும் பண்ணவில்லை.


அது ஒரு கட்டத்தில் மேல் ஒதுங்கி இருந்தது பழக்கமாக மாறி விட்டது. கிட்டதட்ட 5 ஆண்டுகள் எதுவுமே பண்ணவில்லை. இருந்த சேமிப்புகளை வைத்து அப்படியே ஓட்டிட்டேன். வேலை பார்க்காமல் எவ்வளவு தான் லோன் எடுக்க முடியும். அதேசமயம் வெளியில் எங்குபோனாலும் என்னை யாருமே கண்டுபிடிக்கவில்லை. சில பேர் கண்டுபிடித்து வெயிட் போட்டதாக சொன்னார்கள். 


அதன்பிறகு எஸ்.பி.ஜனநாதன் சார் தான் லாபம் படத்துக்காக என்னை மீண்டும் கூப்பிட்டு வந்தார். என்னுடைய தாழ்வு மனப்பான்மையை போக்க வேண்டும் என சொல்லி போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளில் பணியாற்ற சொன்னார். அப்போது தான் பிரபல பத்திரிக்கை ஒன்று நான் தூய்மை பணியாளர்களுக்கு செய்த உதவி பற்றி கட்டுரை வெளியிட்டதால் தான் நான் மீண்டும் வெளியே தெரிந்தேன். இல்லாவிட்டால் மீண்டும் முடங்கி தான் போயிருப்பேன். ஏன் இந்த இடைவெளி என கேட்டால் என்னுடைய மனப்பான்மை தான். நம்மை சார்ந்த ஊடகம், சினிமா, கூட இருப்பவர்கள் யாருமே சப்போர்ட் கிடையாது. உடலை வைத்தே இவ்வளவு தான் இந்த பொண்ணுன்னு நினைச்சிட்டாங்க. அதனால மார்க்கெட் போயிட்டுச்சி. நிறைய வேலைகள் இருந்தும் வெளிப்படையான மனது என்பது யாருக்கும் கிடையாது. 


அதன் காரணமாகவே நான் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைய தேர்வு செய்தேன்.  10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நெகட்டிவ் வைப் இப்ப இல்ல. அப்போது உடலை சார்ந்து தான் எல்லாம் பேசுவாங்க. இப்போது  வெளிப்பாடு என்பது அடுத்து நீங்க என்ன பண்ணப் போறீங்க உள்ளிட்ட கேள்விகள் எல்லாம் கேக்குறாங்க. அப்ப நடிகை என்றால் குறிப்பிட்ட சில கேள்விகள் மட்டுமே கேட்பார்கள். அறிவே இல்லைன்னு முடிவு பண்ணிருவாங்களான்னு தெரியல” என சரண்யா வருத்தத்துடன் அந்த நேர்காணலில் பேசியுள்ளார்.