ஹிந்து கோவிலுக்கு சென்றதற்காக  இணையதளத்தில் விமர்சிக்கப்பட்ட நடிகை சாரா அலிகான் தன் சார்பில் விளக்கமளித்துள்ளார்.


மத்திய பிரதேசத்தில் அமைந்திருக்கும்  புகழ்பெற்ற மகா காலேஸ்வரர் சிவன் கோவிலுக்கு நடிகை சாரா அலிகான் அண்மையில் சென்றிருந்தார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தின் பகிரப்பட்டு அவரை ட்ரோல் செய்து வந்தனர் குறிப்பிட்ட சிலர்.


 தற்போது தான் நடித்துள்ள படமான ஜரா ஹட்கே ஹரா பச்கே படத்திற்காக நேற்று பேட்டியாளர்களை சந்தித்த சாராவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது . அப்போது அதற்கு பதிலளித்த சாரா. “ என்னுடைய தொழில் நடிப்பது. நான் நடிப்பது உங்களுக்காக , மக்களுக்காக. என்னுடைய வேலை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதற்காக நான் வருத்தமடைவது நியாயமானது. ஆனால் எனக்கு தனிப்பட நம்பிக்கைகள் இருக்கின்றன. ஒரே சமயத்தில் நான் பங்கலா சாஹிப் அல்லது மகா கால் போகும் அதே பக்தியோடு தான் அஜ்மர் ஷரிஃபுக்கும் செல்கிறேன். இனியும் தொடர்ந்து செல்வேன். அதற்காக என்னை யார் என்ன சொன்னாலும் அதைபற்றி நான் கவலைப்படப் போவதில்லை. ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு ஆற்றல் இருக்கிறது. நான் இப்பொது இந்த இடத்தின் ஆற்றலை விரும்புகிறேன். ஒரு படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் வேறு வகையான ஒரு ஆற்றலை உணர்கிறேன். அதேபோல்  கோவிலுக்கு செல்லும் போதும்” என்று தெரிவித்துள்ளார்


நடிகர் சைஃப் அலிகான் மற்றும் அவரது முதல் மனைவியான அம்ரிதா சிங்க் ஆகிய இருவரின் மகள் சாரா அலி கான். இருவேறு மதத்தைச் சார்ந்த பெற்றோர்களைக் கொண்டிருப்பதால் ஹிந்து மற்றும் இஸ்லாமிய கோவில்களுக்கு செல்லும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார் சாரா அலி கான். கேதார்நாத் படத்தில் மூலம் பாலிவுட் சினிமாவிற்கு அறிமுகமானவர் சாரா. தொடர்ந்து சிம்பா என்கிற படத்திலும் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக நல்ல வெற்றிபெற்றன. இதனைத் தொடர்ந்து அவர் நடித்தப் படங்கள் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தன. பின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கிய அத்ரங்கி ரே என்கிற படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்தார் சாரா. இந்தப் படத்தின் வழியாக தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார் சாரா


தற்போது நடிகர் விக்கி கெளஷலுடன் இணைந்து நடித்து வருகிறார் சாரா. ஜரா ஹட்கே ஜரா பச்கே (zara hatke zara bachke) என இந்தப் படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. லக்‌ஷ்மன் உடேகர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  வரும்  ஜூன் 2 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மர்டர் முபாரக், ஏ மேரே வதன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் சாரா அலி கான்.