நடிகை மீனாவை நடிகைகள் சங்கீதா, ரம்பா, சங்கவி ஆகியோர் குடும்பத்துடன் சந்தித்து உள்ளனர். 


கணவரின் இறப்புக்கு பிறகு வெளியே தலைக்காட்டாமல் இருந்த நடிகை மீனாவை நடிகைகள்  சங்கீதா, ரம்பா, சங்கவி ஆகியோர் தங்களது குடும்பத்துடன் சென்று சந்தித்து உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.


 






சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்த மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். 


நுரையீரல் பாதிப்பு


இதனிடையே கணவர் வித்யாசாகருக்கு ஏற்கனவே இருந்த நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.  இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 28 ஆம் தேதி இரவு உயிரிழந்தார். 8 வயதாகும் வித்யாசாகரின் மறைவு மீனாவின் ரசிகர்களையும், திரையுலகைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில்  பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளம் வாயிலாக மீனாவுக்கு தெரிவித்தனர். 


நடிகர்கள் ரஜினி,பிரபுதேவா, நடிகைகள் லட்சுமி, குஷ்பூ,சினேகா, ரம்பா, கலா மாஸ்டர் என பல பிரபலங்களும் மீனா வீட்டுக்கு நேரில் சென்று கணவர் வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கணவரின் இறுதிச்சடங்கில் அவரது உடலுக்கு நடிகை மீனா முத்தமிட்டு பிரியாவிடை அளித்த  போட்டோக்கள், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி காண்போரை கண்கலங்க செய்தது.


இதனிடையே மீனாவின்  இறப்பு குறித்து சமூகவலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதற்கு பதிலளித்த மீனா, “தயவு செய்து இந்த விஷயத்தில் தவறான தகவல்களை ஒளிபரப்புவதை நிறுத்துங்கள்.  இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் , எங்கள் குடும்பத்துடன் நின்று உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். 


 






மேலும் தனது திருமணநாளன்று,  ‛‛நீங்கள் எங்களின் அழகான ஆசீர்வாதமாக இருந்தீர்கள், ஆனால் மிக விரைவில் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டீர்கள். என்றென்றும் எங்கள் (என்) இதயங்களில் வாழ்வீர்கள். அன்பு மற்றும் பிரார்த்தனைகளை அனுப்பியதற்காக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நல்ல இதயங்களுக்கு நானும் எனது குடும்பத்தினரும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். எங்களுக்கு அவர்கள் கண்டிப்பாக தேவை. அன்புடனும் அக்கறையுடனும் ஆதரவுடனும் எங்களைப் பொழியும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைக் கொண்டிருப்பதற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அன்பை உணர்கிறோம்,’’ என்று பதிவிட்டு இருந்தார்.