திரையுலகில் நடிகைகள் மற்றும் பிரபலங்களாக உலா வருபவர்களுக்கு பாலியல் தொல்லைகள் தரப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில்,  கேரளாவில் திரைப்பட வாய்ப்புகளுக்காக நடிகைகளிடம் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பாலியல் தொல்லை அளிப்பதாக ஹேமா கமிட்டி தாக்கல் செய்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாலியல் வன்கொடுமைகள்:


இந்த நிலையில், வளர்ந்து வரும் இளம் நடிகை சனம் ஷெட்டி நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து  போராட்டம் நடத்த அனுமதி கோரி வந்திருந்தார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,


“பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் குறித்து பேச கஷ்டமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 4 வழக்குகள் பதிவாகி உள்ளது. கொல்கத்தாவில் நடந்ததற்கு இங்கு ஏன் போராட வேண்டும் என்று கேட்கிறார்கள். கிருஷ்ணகிரியில் 13 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று உள்ளது. இதில் அப்பள்ளியின் முதல்வரும் சம்பந்தப்பட்டு உள்ளார்.


தமிழ் திரையுலகிலும் பாலியல் தொல்லை:


நிர்பயா வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பிறகுதான் தண்டனை அளிக்கப்பட்டது. பெங்களூரில் 21 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று உள்ளது. மகாராஷ்ட்ராவில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது. ஹேமா கமிட்டி குறித்து எனக்கு விவரங்கள் எதும் தெரியாது. அதை நான் வரவேற்கிறேன். இதற்காக கேரள அரசுக்கும், ஹேமாவுக்கும் நன்றி.


தமிழ் திரையுலகிலும் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் உள்ளது. பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லும் நிலை தமிழ் திரையுலகிலும் உள்ளது. கேரளாவைப் போல தமிழ் திரையுலகிலும் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்.”


இவ்வாறு அவர் கூறினார்.


தமிழில் சின்னத்திரை, வெள்ளித்திரையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக பல நடிகைகளும் குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது சனம் ஷெட்டி குற்றம் சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சனம் ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். 2012ம் ஆண்டு வெளியான அம்புலி படத்தின் மூலமாக அவர் நாயகியாக தமிழில் அறிமுகமானார். தமிழில் வால்டர், மகா, ஊமை செந்நாய் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது எதிர் வினையாற்று என்ற படத்தில் நடித்து வருகிறார்.