தூய்மை பணியாளர்கள் போராட்டம், மெளனம் காக்கும் ஸ்டார்கள்

சென்னை மாநகராட்சி தூய்மை பணிகளை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்ததை கண்டித்தும் , பணி நிரந்தரம் கேட்டும் ரிப்பன் பில்டிங் முன்பு 2000 க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ராயபுரம், திரு வி.க நகர் ஆகிய இரு மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தொடங்கிய போராட்டம் இன்று 12 ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. இதனால் சென்னை மாநகராட்சி 5 மற்றும் 6 ஆவது மண்டலங்களில் குப்பைகள் அகற்றப்பட்டமல் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள். 

தூய்மை பணியாளர்களுடன் இதுவரை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற ஏழு கட்ட பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படவில்லை. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா , பாடகி சின்மயி உள்ளிட்ட அரசியல் மற்றும் திரைத்துறை பிரமுகர்கள் தூய்மை பணியாளர்களின் போராட்ட களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்கள். வழக்கம் போல இந்த போராட்டம் குறித்தோ மக்களுக்கு ஆதரவாகவோ பெரிய ஸ்டார்கள் வாய் திறக்காமல் மெளனம் காத்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் அரசியல் ஆதாயத்திற்காகவும் , தனிப்பட்ட  லாபத்திற்காகவும் சிலர்  இந்த போராட்டத்தில் தங்களை முன் நிறுத்திக் கொள்கிறார்கள் என்கிற குற்றசாட்டும் எழுந்துள்ளது.

போராட்டத்தில் கலந்துகொண்ட சனம் ஷெட்டி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் கவனமீர்த்தவர் சனம் ஷெட்டி. பெரியளவில் பட வாய்ப்புகள் இல்லாததால் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ச்சியாக சர்ச்சையாக பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார். ஜன நாயகன் படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக சொல்லி ஏமாற்றப்பட்டதாக அண்மையில் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வகையில் தற்போது தூய்மை பணியாளர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு கவனமீர்த்துள்ளார் சனம் ஷெட்டி. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக அவர் நின்றாலும் கவனமீர்க்கவே அவர் இப்படி செய்வதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.