தன்னுடைய பெயருக்கு பின்னால் சாதிய பெயரை சேர்த்துக் கொள்ள விருப்பமில்லை என வாத்தி பட நடிகை சம்யுக்தா தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் வாத்தி. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படமானது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள வாத்தி படத்தில் சாய் குமார், சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
வாத்தி படம் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சம்யுக்தா, “1990 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள்” குறித்து பேசுவதாக குறிப்பிட்டார். மேலும் கல்வியில் மாற்றத்தைக் கொண்டு வர போராடும் ஆசிரியர், ஆசிரியை கேரக்டரில் நானும், தனுஷூம் நடித்துள்ளோம். நான் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். அதன்பிறகு நடிக்க வந்து விட்டேன். டிகிரி இருந்தால் மரியாதை கிடைக்கும் என்பதில்லை. வேலைக்கான படிப்பு, பணத்துக்கான படிப்பு என படிக்காமல், நமக்கு பிடித்ததை படிக்க வேண்டும் என சம்யுக்தா கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் பாலக்காடு பெண் என்பதால் தமிழில் பேசுவேன். இப்போது தெலுங்கும் கற்றூக்கொண்டேன். நேரம் இல்லாததால் வாத்தி படத்தில் டப்பிங் பேசவில்லை. தமிழ் தான் எனக்கு பிடித்த மொழி. அதனால் தமிழ் இலக்கணங்களை கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன். வாய்ப்புகள் சரியாக அமையாதது தான் நான் தமிழில் நடிக்காததற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் வாத்தி பட டைட்டில் உட்பட எந்த படத்திலும் என் பெயருக்கு பின்னால் “மேனன்” என்ற சாதிய பெயர் இருக்காது. அதனை நீக்க சொல்லிவிட்டேன். சாதி அடையாளத்தை போட்டுக்கொள்வதில் எனக்கு எந்த உடன்பாடுமில்லை. சாதியிலும் உடன்பாடில்லை. மீடியாக்கள் என்னை சம்யுக்தா என கூப்பிடவே விரும்புகிறேன் என நடிகை சம்யுக்தா தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் பாப்கார்ன் படத்தின் மூலம் அறிமுகமான சம்யுக்தா, 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான களரி படத்தில் முதல்முறையாக நடித்தார். பின்னர் ஜூலை காற்றில், லில்லி, தீவண்டி, கல்கி, உயரே, வெல்லம் தி எசேன்ஷியல் டிரிங்க், ஆணும் பெண்ணும், பீம்லா நாயக், கடுவா, பிம்பிசாரா என பல படங்களில் நடித்துள்ளார்.