நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இதற்கு திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் ரத்தப் பரிசோதனை, இருதய நோய் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றை தெரிந்துகொள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்துகொள்ள முடியும். இந்த முகாமில் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முடி உதிர்தல் பிரச்னை
இந்நிலையில், பிரபல நடிகை சமீரா ரெட்டி இந்த திட்டத்தை பாராட்டி வீடியோ ஒன்றை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒன்பது வருடத்திற்கு முன்பு எனக்கு முடி உதிர்தல் பிரச்னை இருந்தது. அதன் பின்பு உரிய பரிசோதனை மேற்கொண்டு உடல் ரீதியான பிரச்னைகளை தெரிந்துகொள்ள முடிந்தது.
நடிகை சமீரா ரெட்டி பாராட்டு
அதேபோன்று தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் நோய் பாதிப்பு அறிந்த பின்பு தான் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்கிறார்கள். ஆனால், நோயின் அறிகுறியை முன் கூட்டியே அறிந்துகொள்வது மிகவும் அவசியம். இதன் மூலம் உயிரிழப்பை தவிர்க்கலாம். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் நன்மை காக்கும் முகாமை தொடங்கி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் முதல் முறையாக, 1256 மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் மகளிர் மருத்துவம், இருதய பிரச்னை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
முதல்வருக்கு வாழ்த்து
இந்த பரிசோதனைகள் மூலம் நோய் வருவதை தவிர்க்க முடியும். முதல்வர் ஸ்டாலின் தக்க நேரத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இதன் மூலம் கிராமப்புறத்தை சேர்ந்த பெண்கள் அதிகம் பயன் அடைவார்கள். ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைத்து மக்களும் இலவச பரிசோதனை மேற்கொள்ளும்படியான இந்த திட்டம் பாராட்டக்கூடியது என சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.