India Registered Post: பதிவு அஞ்சல் சேவையை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தபா துறை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பதிவு அஞ்சல் சேவைக்கு முற்றுப்புள்ளி:
இந்திய தபால் துறை, 50 ஆண்டுகளுக்கும் அதிகமான சகாப்தத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், அதன் புகழ்பெற்ற பதிவு அஞ்சல் (ரிஜிஸ்டர்ட் போஸ்ட் ) சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல், செயல்பாடுகளை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு ஸ்பீட் போஸ்ட் உடன் ஒருங்கிணைக்கும் ஒரு பகுதியாக இந்த சேவை படிப்படியாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பகமான சேவையாக உள்ள ரிஜிஸ்டர்ட் போஸ்ட் , அதன் நம்பகத்தன்மை, மலிவு மற்றும் சட்டப்பூர்வ செல்லுபடியாகும் தன்மைக்கு பெயர் பெற்றது. லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் வேலை வாய்ப்புகள், சட்ட அறிவிப்புகள் மற்றும் அரசாங்க கடிதப் போக்குவரத்து போன்ற முக்கியமான ஆவணங்களை வழங்க இந்த பதிவு அஞ்சல் சேவை பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
25% வரை சரிவு
கடந்த 2011-12 ஆம் ஆண்டில் 244.4 மில்லியனாக இருந்த ரிஜிஸ்டர்ட் போஸ்ட்களின் எண்ணிக்கை, 2019-20 ஆம் ஆண்டில் 184.6 மில்லியனாக அதாவது 25 சதவிகிதம் வரை குறைந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பயனர்கள் டிஜிட்டல் முறைக்கு மாறியது, தனியார் கொரியர்கள் மற்றும் இ-காம்ர்ஸ் தளவாடங்களின் போட்டியால் இந்த சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஸ்பீட் போஸ்டுடன் இணைப்பு:
அனைத்து துறைகள், நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயனர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் புதிய முறைக்கு மாற வேண்டும் என அஞ்சல் துறையின் செயலாளர் மற்றும் இயக்குநர் ஜெனரல் அறிவுறுத்தியுள்ளார். இந்த இணைப்பு 1986 முதல் செயல்பட்டு வரும் ஸ்பீட் போஸ்டின் கீழ் சேவைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் கண்காணிப்பு துல்லியம், விநியோக வேகம் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இருப்பினும், ஸ்பீட் போஸ்ட் விலை அதிகமாக இருப்பதால், மலிவு விலை குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. ரிஜிஸ்டர்ட் போஸ்ட்டின் தொடக்க விலை ரூ.25.96 ஆக இருக்க, ஒவ்வொரு 20 கிராமிற்கும் ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் 50 கிராம் எடையிலான ஸ்பீட் போஸ்டிற்கான கட்டணம் ரூ.41 இல் தொடங்குகிறது, இதனால் 20-25% செலவு அதிகமாகிறது. இந்த விலை வேறுபாடு கிராமப்புற இந்தியாவை பாதிக்கலாம், அங்கு அஞ்சல் அலுவலகங்கள் தகவல் தொடர்புக்கு மிக முக்கியமானவையாக உள்ளன. சிறு வணிகர்கள், விவசாயிகள் மற்றும் மலிவு சேவைகளை நம்பியிருக்கும் சாதாரண குடிமக்களுக்கு சுமையாக மாறலாம். டிஜிட்டல் யுகத்தில் வளர்ந்து வரும் பயனர் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய இந்த மாற்றம் அவசியம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
சட்டப்பூர்வ ஆவண பரிமாற்றத்தில் முக்கிய பங்கு:
ஸ்பீட் போஸ்ட் கண்காணிப்பு மற்றும் ஒப்புதல் போன்ற முக்கிய அம்சங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று தபால் துறை உறுதியளித்தாலும், இந்த நடவடிக்கை ரிஜிஸ்டெர்ட் போஸ்ட்டை நம்பிக்கையின் அடையாளமாகக் கருதும் பயனர்கள், குறிப்பாக பழைய தலைமுறையினர் மற்றும் கிராமப்புற சமூகத்தினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிஜிஸ்டெர்ட் போஸ்ட் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் வேர்களைக் கொண்டுள்ளது, பாதுகாப்பான, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை அனுப்புவதற்கான நம்பகமான முறையாக செயல்படுகிறது. வங்கிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அமைப்புகள் போன்ற நிறுவனங்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் ரிஜிஸ்டெர்ட் போஸ்ட், அதன் விநியோகச் சான்று மற்றும் மலிவு விலைக்காக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. நீதிமன்றங்களில் விநியோகம் மற்றும் இடுகையிடலுக்கான சான்றுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை, இது அரசுத் துறைகள், வங்கிகள், நீதிமன்றங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இணக்கம் மற்றும் ஆவணங்களை உறுதி செய்வதற்கான நம்பகமான முறையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.