நடிகை சமந்தா மணமுறிவுக்குப் பின்னும் தன் முன்னாள் கணவர் நாகசைதன்யாவின் பெயர் கொண்ட டாட்டூவை அழிக்காமல் உள்ளது கவனமீர்த்துள்ளது.
டோலிவுட் குயின்
’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு பதிப்பான ’ஏ மாயா சேசாவே’ படத்தின் மூலம் டோலிவுட்டில் நடிகர் நாகசைதன்யாவுடன் 2010ஆம் ஆண்டு சமந்தா அறிமுகமானார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சமந்தா அறிமுகமான நிலையில், தன் முதல் பட நடிகர் நாகசைதன்யாவுடன் தொடர்ந்து நல்ல நட்புறவைப் பேணி வந்தார்.
தொடர்ந்து சமந்தா டோலிவுட்டில் பிரபல நடிகையாக உருவெடுத்த நிலையில், நாகசைதன்யாவுடன் அவர் காதலில் விழுந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து இருவரும் காதலை உறுதிசெய்ய 2017ஆம் ஆண்டு இருவரும் கோலாகலமாகத் திருமணம் செய்து கொண்டனர்.
4 ஆண்டு திருமண வாழ்க்கை
டோலிவுட் சினிமாவில் பெரிதும் ரசிக்கப்பட்டு கொண்டாடப்படும் ஆதர்ச ஜோடியாக இவர்கள் இருவரும் வலம் வந்த நிலையில், சமந்தா திருமணத்துக்குப் பின்னும் தொடர்ந்து நடித்து வந்தார்.
இந்நிலையில், 4 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பிறகு சமந்தா - நாக சைதன்யா இருவரும் பிரிவதாக சென்ற 2021ஆம் ஆண்டு அறிவித்து விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்துக்குப் பிறகு சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களுக்கும் கேலிக்கும் உள்ளான சமந்தா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். மற்றொருபுறம் மயோசிட்டிஸ் நோயாலும் பாதிக்கப்பட்ட சமந்தா, தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றும் வந்தார்.
இதனிடையே புஷ்பா படத்தில் இவர் நடனமாடிய ’ஊ அண்டாவா பாடல்’ மிகப்பெரும் ஹிட் அடிக்க, மீண்டும் பழைய மோடுக்குத் திரும்பி, டோலிவுட், இந்தி, இணைய தொடர் என கலக்கி வருகிறார்.
அந்த வகையில் தற்போது சீட்டடெல் இணைய தொடரின் இந்தி பதிப்பில் நடிகர் வருண் தவானுடன் சமந்தா நடித்து வருகிறார். நடிகை பிரியங்கா சோப்ரா - நடிகர் ரிச்சர்ட் மேடன் நடித்துள்ள சீட்டடெல் தொடரின் ஆங்கிலப் பதிப்பு இன்னும் சில தினங்களில் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், முன்னதாக இதற்கான ப்ரீமியர் நிகழ்வு லண்டனில் நடைபெற்றது. இந்த விழாவில் சமந்தா கலந்து கொண்டார்.
இந்த விழாவுக்கு சமந்தா அணிந்து வந்த கருப்பு நிற உடை பலரது கவனத்தையும் ஈர்த்ததுடன் சமந்தாவின் லுக் இணையத்தில் லைக்ஸ் அள்ளியது. இந்நிலையில், தன் மகிழ்வான கல்யாண வாழ்க்கையின்போது ‘சாய்’ எனும் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் பெயர் கொண்ட டாட்டூவை சமந்தா பொரித்துக் கொண்ட நிலையில், இந்த விழாவுக்கு தன் டாட்டூ தெரிய அவர் உடை அணிந்து வந்தது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
நாகசைதன்யாவின் பெயர் கொண்ட டாட்டூவை இன்னும் அழிக்காமல் பேணி வருவதுடன், தன் பின் கழுத்துப் பகுதியில் YMC எனும் தன் டோலிவுட் அறிமுகப் படத்தின் டாட்டூவையும் சமந்தா பொரித்துள்ளார்.
இதே போல் நாகசைதன்யாவும் சமந்தாவும் தங்கள் திருமண வாழ்க்கையின்போது இரண்டு ஏரோக்கள் கொண்ட ஒரே மாதிரியான டாட்டூவை கைகளில் பொரித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.