பிரபல நடிகை சமந்தா படப்பிடிப்பில் தனது கையில் காயம் ஏற்பட்டிருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தனது மணமுறிவுக்கு பிறகு, படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். கடந்தாண்டு அவர் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகிய படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து வரும் சமந்தா தற்போது சாகுந்தலம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.
அதேசமயம் உடல்நிலை பிரச்சினையால் அவதிப்படும் மனதளவில் தயாராகும் வகையில் தீவிர உடற்பயிற்சி, பயணம் மேற்கொள்வது என பல நடவடிக்கையில் களமிறங்கியுள்ளார். அண்மையில் கும்பாபிஷேகம் முடிந்த பழனி முருகன் கோயிலுக்கு அவர் வருகை தந்திருந்தார். 600 படிகளிலும் சூடமேற்றி பிரார்த்தனை செய்த அவர், பின்னர் சாமி தரிசனம் செய்தார். இதன் வீடியோ இணையத்தில் வைரலானது.
மேலும் சமந்தா பாக்ஸிங், குதிரையேற்றம், தீவிர உடற்பயிற்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சமந்தா மகிழ்வித்து வந்தார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தனது கையில் காயம் ஏற்பட்டிருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் கைகளில் ரத்தக் கறைகளும், தழும்புகளும் உள்ளது.
நடிகை சமந்தா தற்போது இந்தியில் நடிகர் வருண் தாவானுடன் இணைந்து சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகின்றார். சமந்தா இந்த வெப் தொடரில் சில அதிரடி காட்சிகளில் நடித்து வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், சமந்தா இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.