சமந்தாவின் ஓராண்டு போராட்டம்


கடந்த ஆண்டு நடிகை சமந்தாவிற்கு மையோசிடிஸ் என்கிற நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இந்த நோய்க்காக கடந்த ஓராண்டு காலமாக ஹைபர்பாரிக் என்கிற கடுமையான சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார் சமந்தா. உணவுமுறையில் மாற்றங்கள், ஐஸ் பக்கெட்டில் இருப்பது, ஆக்ஸிஜன் சேம்பரில் இருப்பது என பல்வேறு சிகிச்சை முறைகளைப் பின்பற்றி வருகிறார் சமந்தா.


தற்போது பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் சீட்டடெடல் தொடரில் நடித்துவருகிறார் சமந்தா. செர்பியாவில் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் செர்பியாவில் உள்ள சர்ச்சிற்கு சென்று மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்துள்ளார் சமந்தா. இத்துடன் இந்த ஓராண்டு காலமாக தான் கடந்து வந்த பாதை குறித்த நீண்ட பதிவு ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சமந்தா.


மன நிம்மதிக்காக பிரார்த்தனை செய்கிறேன்


“மையோசிடிஸ் நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டு கிட்டதட்ட ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டு காலத்தில் என் உடலும் நான் எதிர்கொண்ட போராட்டங்கள் ஏராளம். உப்பு , சர்க்கரை என எதுவும் சேர்த்துக்கொள்ளாத உணவுகள், வீழ்ந்து கிடப்பது பின் மீண்டும் தொடங்குவது.


வாழ்க்கையின் அர்த்தங்களைத் தேடுவது,  தொழில் ரீதியிலான தோல்விகள், என எத்தனையோ விஷயங்கள். இந்த ஓராண்டு காலமாக நான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன் ஆசிர்வாதங்களுக்காகவோ பரிசுகளுக்காகவோ நான் பிரார்த்திக்கவில்லை. போராடுவதற்கான் வலிமை மற்றும் மன நிம்மதிக்காகவும் பிரார்த்தித்து இருக்கிறேன்.


தொடர்ந்து போராட கற்றுக் கொண்டிருக்கிறேன்


”நாம் நினைத்து போல் எல்லாம் நடந்துவிடாது என்பதை இந்த ஆண்டு எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. அப்படி நடக்காத நேரங்களை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும் என்பதனையும் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். என் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் விஷயங்களைப் பற்றி மட்டுமே நான் கவனம் செலுத்தவும், மற்றதை அதன் போக்கில் விட்டுவிடவும் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.


கடந்த காலத்தில் நடந்ததை நினைத்து சோர்ந்து விடாமல் தொடர்ந்து முன் நகர்ந்து கொண்டே இருக்க நான் முடிவு செய்திருக்கிறேன். வெற்றி, தோல்வி என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் ஒரு சமயத்தில் ஒரு அடி எடுத்து வைப்பதே ஒரு வெற்றி என்பதை நான் புரிந்துகொண்டிருக்கிறேன். நான் நேசிப்பவர்களுக்காக என்னை நேசிப்பவர்களுக்காகவும் நான் தொடர்ந்து போராட வேண்டும்.”


உங்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன்


”என்னைப் போல் எத்தனையோ போராட்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறீர்கள். நான் இன்று உங்களுக்காகவும் சேர்த்து பிரார்திக்கிறேன். கடவுள் நம் வேண்டுதல்களை நிறைவேற்ற தாமதிக்கலாம் ஆனால் ஒருபோது நிராகரிப்பதில்லை. அன்பு, அமைதி , மகிழ்ச்சி ஆகியவை மட்டுமே நிலையானவை அவற்றைத் தேடுபவர்களை கடவுள் நிராகரிப்பதில்லை.” எனப் பதிவிட்டுள்ளார் சமந்தா.