தலைப்பை பார்த்து சீரியஸாக இதை படிக்க வேண்டும்; இது வாய்ப்பு என்கிற அநீதியை குறிப்பிட்டு தொடங்கும் கதை. எனவே அதே பார்மட்டில் நீங்களும் பயணிக்கவும். சமீபத்தில் எங்கு பார்த்தாலும் முணுமுணுக்கப்படும் பெயர் சமந்தா. அவர் நேற்று அறிமுகமாகி, இன்று நடிப்பவர் அல்ல. 2010 ல் தொடங்கி இன்றும் நான்ஸ்டாப் பஸ்ஸாக நகர்ந்து கொண்டிருக்கும் மார்க்கெட் ராணி. சென்னை பல்லாவரத்தில் பிறந்தாலும், தமிழை விட ஆந்திராவில் காரம் சாரமான மிளகாயாய் மிதந்து கொண்டிருக்கிறார் சமந்தா. தமிழும் அவருக்கு சளைத்தது அல்ல. இங்கும் முன்னணி நடிகர்களின் நாயகியாக பிஸி தான். இடையில் நடந்த இல்லற வாழ்க்கையால், ஆந்திராவின் மருமகளாகி, தமிழ்நாட்டில் இருந்து தனித்திருந்தாலும், அவ்வப்போது எண்ட்ரி கொடுத்து இனித்திருந்தார்.
சமந்தா... எப்போதும் கொண்டாடப்படும் நடிகையாக இருந்ததில்லை. ஆனால் அதற்கான முயற்சிகளை அவர் எடுத்துக் கொண்டே இருந்தார். ஒரு நடிகருக்கான பெயர், அவரை தேடி வரும் கதாபாத்திரத்தை சார்ந்தது. சமந்தாவிற்கும் அது பொருந்தும். அவரை தேடி வந்த கதாபாத்திரங்கள் அப்படி. அதனால் அதற்குள் அவர் அடைப்பட்டிருக்கலாம். இதை தாண்டி இரு முறை அவர் அதை உடைத்திருக்கிறார். ஒன்று... 2014ல் வெளியான அஞ்சான்...! அதன் பின்... 2021 இறுதியில் வெளியான புஷ்பா. இது இரண்டிலும் அவருக்கு அடையாளம் தந்தது கிளாமர் என பலர் நினைக்கலாம். ஆனால் உண்மை அது அல்ல; அவரது நடனம் மட்டுமே.
சமந்தா இந்த அளவிற்கு ஆடுவாரா என்பது அஞ்சான் படத்தில் வரும் ‛ஏக் தோ தீன்....’ பாடலில் தான் பலருக்கு தெரியவந்தது. மேலும் கீழும் அவிழ்ந்த பட்டனை கொண்ட சட்டையும், குட்டி கால் சட்டையுமாய் சாயம் தேங்கிய குட்டையின் அருகே குட்டி பாவடையில் அவர் போட்ட ஆட்டம், எங்கு பார்த்தாலும் சமந்தா பெயரை கொண்டு சேர்த்தது. அதன் பிறகு கூட அவர், நிறைய பீட் சாங்ஸிற்கு ஆடியிருந்தாலும், அந்த ரீச் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின் புஷ்பாவில் அவர் போட்ட ‛ஓ... சொல்றீயா... ஓஓ சொல்றீயா...’ பாடலுக்கான ஆட்டம் தான், இன்று பலரை ஆட்டம் போட வைத்திருக்கிறது.
கிளாமர், டான்ஸ் என இரண்டும் ஒரு சேர அவருக்கு ஒரு பாடல் அமைந்தால் அது ஹிட் தான். ஆனால் ஏனோ பெரும்பாலான இயக்குனர்கள் அதை பயன்படுத்த தவறிவிட்டார்கள் என்றே தெரிகிறது. அதோடு இன்னொரு டேட்டாவும் இதில் வருகிறது. ஆண்ட்ரியா குரல் கொடுத்த பாடல்கள், சமந்தாவுக்கு ஹிட். ‛ஏக் தோ தீன்...’ பாடலுக்கும் ஆண்ட்ரியா தான் சமந்தாவுக்கு குரல் கொடுத்தார். இப்போது புஷ்பாவிலும் அவரே குரல். சமந்தா டப்பிங்கில் ஆண்ட்ரியா குரல் மேட்ச் ஆகும் என்பதால், அவர் பாடும் பாடல்களும் அவருக்கு அவ்வளவு பொருத்தம்.
சமந்தாவுக்கு நன்றாக டான்ஸ் வரும். ஆனால், அவரை அழகு பதுமையாக மட்டுமே பல இயக்குனர் உபயோகித்தார்கள். கதாநாயகிகளுக்கு கட்டாயம் பாடல் வைக்கும் பார்முலா இருந்தும் கூட, அவருக்கான பாடலையும், ஆடலையும் தேர்வு செய்யாதது இயக்குனர்களின் குற்றமே. அதனால் தான், இது மாதிரியான பிளே லிஸ்ட் வர வருட கணக்கில் ஆகிறது. சமந்தா-ஆண்ட்ரியா-கிளாமர் இணைந்தால் அது நிச்சயம் ஹிட் என்கிறது பார்முலா. ஆனால் அந்த பார்முலாவை பலர் தவறவிட்டிருக்கிறார்கள்.
சமந்தாவை குடும்பபாங்கான பாத்திரத்தில் அடைக்க முடியாது. அவ்வாறு அடைத்தவர்களும் உண்டு. அதையெல்லாம் கடந்து, தன் விருப்ப வாய்ப்புகள் வரும் போது அதை வேறு கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். முன்பு கூறியது தான், வரும் வாய்ப்புகள் தான் அதை முடிவு செய்கின்றன. புஷ்பா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு தான் வருகிறார்; அல்லு அர்ஜூன் படம், ராஷ்மிகா படம் என்பதை கடந்து சமந்தா படம் என்கின்றனர். அது தான் தாக்கம்.
சமீபத்திய சமந்தா, பலவற்றை உடைத்துக் கொண்டிருக்கிறார். பேமிலி மேன் 2ல் தொடங்கி இன்னும் பல படைப்புகள் அதற்கு உதாரணம். திருமண உறவை உதறி சர்ச்சைக்குள் அடைபடாமல், அடுத்த இன்னிங்ஸை அதே வேகத்தில் தொடங்கி, சிக்ஸர்களை பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார் சமந்தா. இனிமேலாவது சமந்தாவை நாலு பாடல், மூணு காதல், ஐந்து ரொமான்ஸ் காட்சிகளுக்கு ஒப்பந்தம் செய்யாமல், ஒரு பாடலாக இருந்தாலும், அது அவருக்கானதாக இருக்கும்படி இயக்குனர்கள் பார்த்துக் கொண்டால், அவர்களின் படத்திற்கு நிச்சயம் கியாரண்டி உண்டு என்பதை தான் புஷ்பா சொல்கிறது.