தமிழ் சினிமாவில் மலரைப்போல அறிமுகமானதால் என்னவோ ஸ்ரீ லதா என்ற தன்னுடைய இயற்பெயரை சினிமாவுக்காக ரோஜா என மாற்றப்பட்டது. இந்த ரோஜா அறிமுகமான படம் 'செம்பருத்தி'. ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் 1992ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'செம்பருத்தி'. இந்த வாடாத ரோஜா இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
முன்னணி நாயகி :
நடிகர் பிரசாந்த் ஜோடியாக அறிமுகமான ரோஜா தனது யதார்த்தமான நடிப்பால் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மற்றும் மலையாள படங்களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். அதனை தொடர்ந்து சூரியன், அரசாட்சி, ராசய்யா, வீர, ஆயுதபூஜை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார். ரோஜாவின் 100வது திரைப்படம் 'பொட்டு அம்மன்'. 2002 வரையில் முன்னணி நடிகையாக இருந்தவர் பின்னர் ஏராளமான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
ரசிகர் கூட்டம் :
தன்னுடைய வசீகரமான சிரிப்பு, அழகான தோற்றம், திறமையான நடிப்புக்கு ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார் நடிகை ரோஜா. இவரை ரசிகர்கள் 'நவரச நாயகி' என்றே கொண்டாடினார்கள்.
அரசியல் பிரவேசம் :
தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய ஆர்.கே. செல்வமணியை 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஒரு அழகான மகள் மற்றும் ஒரு மகனுக்கு தாயாக குடும்பத்தை சிறப்பாக நிர்வகித்து வருவதுடன் அரசியலிலும் தனது தனித்துவத்தை நிரூபித்துள்ளார். 1999ம் ஆண்டு தெலுங்கு தேச கட்சியின் மகளிர் அணி பிரிவின் தலைவராக இருந்து பின்னர் பலர் மாற்றங்களுக்கு பிறகு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார்.
மக்கள் சேவகி:
மக்களுடன் மக்களாக இருந்து அவர்களின் தொகுதி மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வரும் ரோஜாவை மக்கள் கொண்டாடுகிறார்கள். பல பெண்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார் நடிகை ரோஜா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அரசியலில் பல சந்தர்ப்பங்களை எல்லாம் மிகவும் துணிச்சலாக எதிர்கொண்டு வெற்றி கண்டு வருகிறார்
ரோஜா மகள்:
தாயின் வழியே ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகாவும் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமாக உள்ளார் என்ற பேச்சுக்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வந்தன. ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் அது குறித்து வெளியாகவில்லை.
நடிகை, குடும்ப தலைவி, அரசியல்வாதி என பன்முகம் கொண்ட ரோஜாவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.