5 State Election: மத்திய பிரதேசம் (Madhya Pradesh) மற்றும் சத்தீஸ்கரில் (Chhattisgarh) சட்டமன்ற தேர்தலுக்கான, வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
5 மாநில தேர்தல்:
தற்போது நடைபெற்று வரும் 5 மாநில தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், தெலங்கானா, மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 7ம் தேதி மிசோரமில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதே நாளில் சத்திஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 20 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
சத்தீஸ்கர் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு:
இந்நிலையில் இன்று சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், நக்சல்களால் பாதிக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளில் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், யாரும் எதிர்பாராத விதமாக 78 சதவிகித வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 70 தொகுதிகளில் ந்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பிந்த்ராவாகர் விதான் சபா தொகுதியில் மட்டும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 81 லட்சத்து 41 ஆயிரத்து 624 ஆண்கள், 81 லட்சத்து 72 ஆயிரத்து 171 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 684 பேர் என மொத்தம் ஒரு கோடியே 63 லட்சத்து 14 ஆயிரத்து 479 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இரண்டாம் கட்டத் தேர்தலில் 22 மாவட்டங்களில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் வரும் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பூபேஷ் பாகல் முதலமைச்சராக பொறுப்பேற்றதன் மூலம், அந்த மாநிலத்தில் 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாஜக ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்நிலையில், இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
மத்தியபிரதேசத்தில் வாக்குப்பதிவு:
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 252 பெண்கள் உட்பட 2,533 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். பாஜக சார்பில் ராகேஷ் சிங், க்ணேஷ் சிங் மற்றும் ரிதி பதக் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவிற்காக மொத்தம் 64,626 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், நக்சல்களால் பாதிக்கப்பட்ட தொகுதிகளில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5.6 கோடி வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 2.88 கோடி ஆண் வாக்காளர்களும், 2.72 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். 22.36 லட்சம் இளைஞர்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:
அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீசாருடன், மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நக்சைல் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் திவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு மையங்களும் சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.