நடிப்பிலும், டப்பிங் கலைஞராகவும் வெற்றிபெற்றமைக்கு தன்னுடைய உழைப்பு மற்றும் கேரக்டரோடு ஒன்றிணைந்து நடித்தது தான் காரணம் என மனம் திறக்கிறார் மண்வாசனை பட நாயகி ரேவதி.


பாரதி ராஜாவின் மண்வாசனை படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ஆஷா என்ற ரேவதி. எதார்த்த நடிப்பினால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த நடிகை ரேவதி. திரையுலகில் தான் சந்தித்த நிகழ்வுகள் மற்றும் நடிப்புத்திறன் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றின் வாயிலாக அழகாகப் பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில், பாரதிராஜா படத்தில் நடிக்கும் ஒவ்வொருவரும் பெயரை மாற்றி மாற்றி வைப்பார். அதேப்போன்று தான் எனக்கும் நிகழ்ந்தது. மண் வாசனை படத்தில் நடித்துவிட்டு, படம் வெளியாகும் போது பெயரை மாற்ற வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்த அவர் தனக்கு ரேவதி என பெயர் வைத்துவிட்டதாகவும், இது எனக்கு சுத்தமாகப் பிடிக்கவே இல்லை, இதனால் ரொம்ப அழுதேன் என்று  ரேவதி பகிர்ந்துள்ளார்.





ரேவதியும், நடித்த திரைப்படங்களும்:


மண் வாசனை படம் வெற்றிக்கு பிறகு பல நல்ல திரைப்படங்களில் தான் இதுவரை நடித்துள்ளேன் எனவும் குறிப்பாக மௌனராகம், தேவர்மகன் போன்ற படங்கள் தன்னை உச்சத்திற்கு கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். கார்த்திக் மற்றும் மோகனுடன் இணைந்து நடித்த மௌனராகம் ஒரு வித்தியாசமான கதைக்களம். விரும்பாத பையனை திருமணம் செய்துக்கொண்டதால் மனைவி விவாகரத்து கேட்பது போன்ற நிகழ்வுகள் அனைத்தையும் மணிரத்தினம் கையாண்ட விதம் இப்போதும் மறக்கவே முடியாது என்கிறார். யாராக இருந்தாலும் இதுப்போன்ற கதைக்களத்தை எடுப்பதற்கு சற்று யோசிப்பார்கள். ஆனால் மணி சார் எதைப்பற்றியும் கவலைக் கொள்ளவில்லை.


இதோடு காதல் மற்றும் ரொமான்ஸ் கேரக்டர் என்றால் அது நவரச நாயகன் கார்த்திக்கிற்கு தான் பொருந்தும். மௌனராகம் படத்திலேயே அதனை நீங்கள் பார்த்துள்ளீர்கள் என்றார். அடுத்ததாக தேவர்மகன். வெளிநாடுகளுக்கு சென்றாலும் இப்போதும் நீங்கள் தேவர்மகன் நாயகி தானே என்பார்கள். அந்தளவிற்கு நல்ல ரீச் கொடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து தெய்வாக்கு, கிழக்குவாசல், மறுபடியும், ஜாக்பார்ட், பவர் பாண்டி போன்ற பல்வேறு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெற்றிகண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றிக்கு என்னோட பங்களிப்பும், கேரக்டரோடு ஒன்றிணைந்து நடித்தது தான் காரணம் என்கிறார்.


நடிப்பு மட்டுமின்றி கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் தபுவுக்கும், மின்சாரக்கனவு படத்தில் காஜல் அகர்வாலுக்கும், மலையாளப்படத்திற்கு ஸ்ரீதேவிக்கும் டப்பிங்  ஆர்டிஸ்டாக பணியை மேற்கொண்டேன். நான் ஆர்டிஸ்ட் என்பதால் தண்ணீர் போல அத்தனையும் வழிவிட்டு என்னுடைய திறமையை  வெளிப்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு இறங்கினேன் அதில் வெற்றியும் கண்டேன் என்கிறார்.


ரேவதியும், தேசிய விருதுகளும்:


83ல் ஆரம்பித்த என்னுடைய திரைப்பயணத்திற்கு 1993 ல் தான் தேவர் மகன் படத்திற்காக தேசிய விருதைப் பெற்றதாகவும், இதனையடுத்து 2002 ல் இயக்குநர், 2012 ல் குறும்பட இயக்குநருக்கு தேசிய விருதைப்பெற்றேன் என பெருமையுடன் ரேவதி பகிர்கிறார். மேலும் தனக்கு தென்றல் வந்து தீண்டு போதும் என அவதாரம் படத்தில் வரும் பாடல் தான் ரொம்ப பிடிப்பதாகவும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.





இப்படி நடிப்பு, டப்பிங் என பன்முகத்திறமையைக் கொண்ட ரேவதிக்கு ரசிகர்கள் அன்றைய காலக்கட்டத்தில் கடிதம்அனுப்பி வைப்பார்கள். அதில் ரத்தத்தினால் எழுதிய கடிதங்களை எப்போதும் மறக்கவே முடியாது எனவும் இவ்வாறு இப்படி பண்ணாதீங்கள் என்று எழுதி அனுப்பியதாகவும் பகிர்கிறார். மேலும் 12 பக்க ரசிகர்கள் எழுதிய கவிதையை தற்போதும் வைத்திருக்கிறேன் எனவும் இதனை 85 வயதானும் எடுத்துப் பார்த்து மகிழ்வேன் என்கிறார்.