ராஷ்மிகா மந்தனா
அண்மைக் காலங்களில் தென் இந்திய நடிகைகளில் அதிக கவனம் ஈர்த்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு , மற்றும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக வலம் வந்த ராஷ்மிகா மந்தனா அனிமல் படத்தின் மூலம் இந்தி ரசிகர்களையும் கவர்ந்தார். ஒரு பக்கம் பாராட்டுக்களைப் பெற்றாலும் மறுபக்கம் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ராஷ்மிகா தெலுங்கில் கீதா கோவிந்தம் , டியர் காம்ரேட் ஆகிய படங்களின் மூலம் பிரபலமானார். கடந்த ஆண்டு ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இந்தியில் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வருகின்றன.
தற்போது அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா 2 , தனுஷ் நடிக்கும் குபேரா , இந்தியில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் சிகந்தர் உள்ளிட்ட படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இன்று பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா ஒரு காலத்தில் பார்ப்பதற்கு நடிகை மாதிரியே இல்லை என பல அவமானங்களை எதிர்கொண்டுள்ளார்.
அழுதுகொண்டே வீட்டிற்கு திரும்புவேன்
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தான் நடிகையாவதற்கு முன்பு எதிர்கொண்ட அவமானங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. இதில் ' ஒரு நடிகை மாதிரி நீங்கள் தெரியவில்லை என்று 20 முதல் 25 ஆடிஷன்களில் என்னை நிராகரித்துள்ளார்கள். ஒவ்வொரு முறை ஆடிஷன் முடித்து வீட்டிற்கு திரும்பும் போதும் அழுதுகொண்டே தான் செல்வேன். இருந்தும் நான் தொடர்ந்து முயற்சி செய்தேன். ஒரு படத்திற்கான ஆடிஷனுக்காக நிறைய முறை சென்றேன். பின் ஒரு படத்திற்கு தேர்வு செய்தார்கள் . படத்திற்கான பயிற்சி எல்லாம் அளித்துவிட்டு படத்தை நிறுத்திவிட்டார்கள். எனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். நான் நடித்த படங்களை திரும்பிப் பார்க்கும்போது இந்த காட்சியில் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாமே என்று யோசித்துக் கொண்டே இருப்பேன்" என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா நடித்த முதல் படமான கிரிக் பார்ட்டி படத்திற்கு அவர் ஆடிஷன் செய்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது