ஜோக்கர் படம் எனக்கு ஒரு விசிட்டிங் கார்டு என நடிகை ரம்யா பாண்டியன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.


2015 ஆம் ஆண்டு டம்மி டப்பாசு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். நடிகர் அருண் பாண்டியனின் உறவினர் என்ற அடையாளத்தோடு வலம் வந்த அவருக்கு 2016 ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் படம் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து ஆண் தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு 3வது இடம் பிடித்தார். இதனிடையே நேர்காணல் ஒன்றில் ரம்யா பாண்டியன் தனது சினிமா கேரியர் பற்றி பேசியுள்ளார். 


உதவி செய்ய சென்ற இடத்தில் நடந்த சம்பவம்


என்னோட சகோதரி ஆடை வடிவமைப்பாளராக இருந்த நிலையில் ஒரு போட்டோஷூட்டுக்காக சென்றேன். அப்போது மேக்கப் ஆர்டிஸ்ட் என்னை பார்த்து விட்டு உங்களுக்கு போட்டோஜெனிக் முகம் என சொல்லி 2 புகைப்படங்கள் எடுத்தார். நானும் ஆசையில் ஒரு போட்டோஷூட் பிளான் பண்ணேன். நான் அந்தசமயம் காலேஜ் முடித்துவிட்டு வார இறுதியில் மாடலிங் பண்ணலாம் என முடிவு செய்தேன். ஆனால் எனக்கு அதில் பெரிய அளவில் தகவல் தெரியவில்லை. ஒரு கட்டத்திற்குப் பிறகு படங்கள் வர ஆரம்பித்தது. 


அதன்பிறகு குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அதனைத் தொடர்ந்தே எனக்கு நடிப்பு பிடித்திருக்கிறது என உணர ஆரம்பித்தேன். வீட்டில் சொல்லிவிட்டு வார இறுதியில் குறும்படங்களில் நடித்தேன். இப்போது அதனை திரும்பி பார்த்தால் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு படங்களை விட ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தான் ஒவ்வொரு குடும்பத்துக்கும் என்னை கொண்டு சேர்த்தது. பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி சொல்லி தான் என்னைப் பார்க்க வருபவர்கள் பேசுவார்கள். 


எந்த நோக்கத்துக்காகவும் போட்டோஷூட் இல்லை


நான் போட்டோஷூட் எந்த நோக்கத்துக்காகவும் பண்ணவில்லை. என்னோட கேரியருக்காக பண்ணினேன். எனக்கு பிஆர்ஓ, மேனேஜர் என யாரும் கிடையாது. அந்த போட்டோஷூட் இவ்வளவு ரீச் ஆகும் என நினைக்கவில்லை. அடுத்தாக தேன் என்ற படத்தை இயக்கிய கணேஷ் இயக்கும் படத்தில் ஆரவ் ஜோடியாக நடிக்கிறேன். இந்த படத்தில் நடித்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. 


எனக்கு வெரைட்டியாக கேரக்டர்களை பண்ண வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதனால் தான் வித்தியாசமாக கேரக்டர்களை தேர்வு செய்கிறேன். நான் கதை கேட்கும் போது முதலில் ரசிகராக கதை கேட்பேன். பின் நடிகையாக முடிவு செய்வேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த துறையில் போராடுவது என்பது கடினமான விஷயம். அதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒருவேளை இருந்தால் நல்ல படங்கள் பண்ணும் நடிகையாகவே இருப்பேன். 


விசிட்டிங் கார்டு கொடுத்த ஜோக்கர்


எனக்கு நிறைய இயக்குநர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.ராஜமௌலி, வெற்றிமாறன், மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் ஆகியோரின் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. சொல்லப்போனால் ஜோக்கர் படம் எனக்கு ஒரு விசிட்டிங் கார்டு. நான் பெர்பார்மன்ஸ் பண்ணுவேன்னு  நம்பிக்கை கொடுத்தது அந்த படம் தான். அதைப் பார்த்து தான் என்னை தேடி அடுத்தடுத்த படங்கள் வருகிறது என ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.