சிரிப்பழகி, கண்ணழகி, இடுப்பழகி இப்படி நடிகைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் வர்ணித்து கொண்டாடி வந்த நிலையில் ஒரு புயலாக 'ஐ லவ் யூ லவ் யூ சொன்னாளே... உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாலே...' என ரசிகர்களின் நெஞ்சங்களை எல்லாம் தூண்டில் போட்டு சிறையில் வைத்தவர் அழகி ரம்பா. இந்த அழகு பெட்டகத்தின் 47-வது பிறந்தநாள் இன்று.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்த விஜி முதலில் வெள்ளித்திரையில் அறிமுகமானது ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கத்தில் 1993ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ஆ ஒக்கட்டி அடக்கு' திரைப்படத்தில். மலையாளத்தில் 'சக்ரம்' படத்திலும் தமிழில் 'உழவன்' படத்திலும் அறிமுகமானார். அதற்கு பிறகு நவரச நாயகன் கார்த்திக் ஜோடியாக 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் புகழின் உச்சியை தொட்டார்.
தென்னிந்திய சினிமாவின் மெர்லின் மன்றோ நடிகை ரம்பாதான். அன்றைய முன்னணி மாஸ் ஹீரோக்களான பிரபு, கார்த்திக், அப்பாஸ், விஜய், அஜித், ரஜினி, சரத்குமார், காதலா காதலா என அனைவரின் ஜோடியாகவும் நடித்து ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தார். ரம்பாவுக்கு மற்றுமொரு ப்ளஸ்ஸாக அமைந்தது அவரின் டான்ஸ்.
பிரபுதேவாவிற்கு இணையாக சூப்பர் பாஸ்ட் ஸ்டெப்ஸ் போடுவதில் ரம்பாவை அடித்துக்கொள்ள நடிகைகளே இல்லை. இப்படத்தில் உச்சத்தில் இருந்த ரம்பா நடித்த கடைசி திரைப்படம் 'பெண் சிங்கம்'. கலைஞர் கருணாநிதியின் கதையில் உருவான அப்படம் அவரின் நடிப்பில் வெளியான கடைசி படம்.
தென்னிந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்த ரம்பா த்ரீ ரோஸஸ் படத்தை தயாரித்து நடித்தார். இருப்பினும் தயாரிப்பு அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. சினிமாவில் இருந்து விலகி இலங்கை தொழிலதிபரை மணந்து கொண்டு கனடாவில் செட்டிலாகி மூன்று குழந்தைகளுக்கு தாயான பிறகும் இன்றும் அதே அழகுடன் தோற்றமளிக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராக இருந்ததன் மூலம் நாம் அவரை மீண்டும் காண வாய்ப்பு கிடைத்தது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரம்பா தனது கணவர் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். ஒரு காலத்தில் இம்ப்ரெஸ்ஸிவ் நடிகையாக இருந்த ரம்பா, தற்போது குடும்பத்தை நிர்வகித்து வருகிறார். மீண்டும் அவர் படத்தில் நடிப்பதை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஹேப்பி பர்த்டே ரம்பா!