பிரபல நடிகையான ரம்பாவின் கார் சற்று நேரத்திற்கு முன் விபத்தில் சிக்கியது. பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது, ரம்பா கார் மீது மற்றொரு கார் மோதியது. அதில், ரம்பா உள்ளிட்ட அவரது குழந்தைகளும் படும் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், இளையமகள் சாஷாவிற்கு படுகாயம் ஏற்பட்டது. 


இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மனமுடைந்த ரம்பா, அதை வருத்தத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த பதிவு. 






‛‛பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் வழியில் எங்கள் கார் மற்றொரு கார் மீது மோதியது! "நான் குழந்தைகளுடன் மற்றும் என் ஆயா" நாங்கள் அனைவரும் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறோம் 😔 என் குட்டி சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார் 😞மோசமான நாட்கள் கெட்ட நேரம்’’


என்று அந்த பதிவில் ரம்பா தெரிவித்துள்ளார். 


90களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா, இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபரான இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்தார். கணவருடன் கனடாவில் குடிபெயர்ந்தார் ரம்பா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது இந்தியா வந்து தன் உறவினர்கள், சினிமா தோழர்களை சந்தித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ள ரம்பா, குழந்தைகள் மீதும் குடும்பம் மீதும் அலாதி ப்ரியம் கொண்டவர். 


அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டே இருப்பவர். சமீபத்தில் நடிகை மீனாவை சந்தித்து அவருடைய கவலைகள் மறக்க, அவருடன் நேரத்தை செலவு செய்தவர். தமிழ் குடும்ப பின்னணியில் தன் வாழ்வியல் முறையை மாற்றிக் கொண்டவர். முன்பு சினிமாவுக்குப் பின் டிவி நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்த ரம்பா, அதன் பின் குழந்தைகளுடன் முழுநேரமாக தன் பொழுதை கடத்தத் தொடங்கினர். இந்நிலையில் தான் கனடாவில் தன் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வரும் போது, எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் அவரது குடும்பம் சிக்கியுள்ளது. 


ரம்பாவின் இந்த சோக பதிவைத் தொடர்ந்து, தமிழ் நடிகைகள் பலரும் தங்கள் ஆறுதலை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.