நடிகர் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வலிமை' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வசூல் ரீதியாக வெற்றியடைந்த வலிமை, அதனைத் தொடர்ந்து Zee 5 இல் OTT தளத்தில் படம் வெளியானது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச். வினோத்துடன் இணைந்துள்ளார். இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் ‘நேர் கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து இவர்கள் இணையும் மூன்றாவது படம் இதுவாகும்.
இந்த அறிவிப்பு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஒன்றுதான். இந்த திரைப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.
'ஏகே 61' ஒரு வங்கிக் கொள்ளை திரைப்படம் என்றும், இதில் அஜித் குமார் எதிர்மறையான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படமானது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு, படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம். இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக படத்தை மூன்று மாதங்களுக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்த ஒரு தகவலாக நாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இளம் நாயகி ரகுல் ப்ரீத் சிங் 'ஏகே 61'நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவுடன் என் ஜி கேவில் நடித்த ரகுல், இந்தியன் 2, அயலான் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அடுத்து அஜித் திரைப்படத்திலும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் திரைப்படத்தில் ரகுல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக படத்தில் அதிதி ராவ் ஹைதாரி நடிப்பதாகவும் கூறப்பட்டது. அவரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என தெரிகிறது. அதுமட்டுமின்றி, தபு, யோகி பாபு பிரகாஷ் ராஜ் மற்றும் கவின் ஆகியோர் முக்கிய நடிகர்கள் என்றும் கூறப்படுகிறது.