பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்தின் தாயார் மரணமடைந்த தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராக்கி சாவந்த்:
1997 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் எண்ட்ரியான நடிகை ராக்கி சாவந்த், 2003 ஆம் ஆண்டில் பாலிவுட் திரைப்படமான சுரா லியா ஹை தும்னேயில் பாடல் ஒன்றில் நடனமாடினார். அதுவே அவரது திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. நடனக் கலைஞர், மாடல், நடிகை மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட ராக்கி சாவந்த் இந்தி, கன்னடம் , மராத்தி , ஒடியா , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.
மேலும் . பிக்பாஸ் சீசன் 1, பிக்பாஸ் சீசன் 14, 15 , மராத்தி பிக்பாஸ் சீசன் 4 ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தி கணவரைத் தேர்ந்தெடுத்த ராக்கி சாவந்தின் செயல் நாடு முழுவதும் பெரும் கவனமீர்த்தது. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், ரித்தேஷ் சிங் எனும் வெளிநாடு வாழ் இந்தியரை மணந்து கொண்டார். இவர்களின் திருமண பந்தம் 2022 ஆம் ஆண்டில் முறிந்தது.
புற்றுநோய்:
2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மும்பை வடமேற்கு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ராக்கி சாவந்த் 15 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார். தன்னை எப்போதும் பேசு பொருளாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கும் இவர், சர்ச்சையாக பேசி பல பிரச்னைகளில் சிக்குவது வழக்கம்.
முதல் திருமண முறிவுக்குப் பிறகு அடில் துரானி என்பவருடன் தொடர்பில் இருந்த ராக்கி சாவந்த் சில வாரங்களுக்கு முன் தான் திருமணம் செய்துக் கொண்டார். இதற்காக தனது பெயரை ஃபாத்திமா துரானி என மாற்றிக்கொண்டார் எனவும் சொல்லப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ராக்கி சாவந்தின் இந்த திருமண முடிவுக்கு கடும் எதிர்ப்புகளை பெற்றது. காரணம் மூன்று ஆண்டுகளாக அவரது அம்மா புற்றுநோயுடன் போராடி வரும் நிலையில், அவர் திடீரென திருமணம் செய்துக் கொண்டார்.
தாய் உயிரிழப்பு:
இந்நிலையில் ராக்கி சாவந்த் அம்மா ஜெயா பேடா உயிரிழந்த தகவலை ராக்கி சாவந்த் உறுதிப்படுத்தியுள்ளார். புற்றுநோய் சிகிச்சையில் அவரது பல உறுப்புகள் செயலிழந்துவிட்டதாகவும், உடல் முக்கிய பாகங்களில் புற்றுநோய் தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் தான் தனது தாயின் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்யும்படி ரசிகர்களிடம் கண்கலங்கியபடி ராக்கி சாவந்த் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.