நடிகை ராதிகா சரத்குமார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தின் பதிவில், “மிகவும் அருவருப்பாக உள்ளது. நான் பார்த்த படத்தை தூக்கி எறிய நினைக்கிறேன். ரொம்ப கோபமா வருது” என தெரிவித்திருந்தார். இதனைப் பார்த்த இணையவாசிகள் ரன்பீர் கபூர் நடித்த “அனிமல்” படத்தை பார்த்தீர்களா? என வரிசையாக கேள்வியெழுப்பி வருகின்றனர். அதில் ஒரு சிலர் தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் நடித்த வரலட்சுமி சரத்குமார் நடிப்பை பற்றி பேசலாமா என நகைச்சுவையாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஓடிடியில் வெளியான அனிமல்
ராதிகா படத்தின் பெயரை குறிப்பிடா விட்டாலும் அனைவரின் பதிலும் அனிமல் படத்தைப் பற்றியே உள்ளது.சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், ட்ரிப்தி திம்ரி, பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்ட பலரும் நடித்த படம் “அனிமல்”. இந்த படம் கடந்தாண்டு நவம்பர் மாதம் தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்தது. ரூ.900 கோடி வரை வசூலித்த இந்த படத்தை இந்திய கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் உனட்கட், கேப்டன் மில்லர் மற்றும் தளபதி 68 படங்களின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி, கவிஞர் ஜாவித் அக்தர் உள்ளிட்ட பிரபலங்கள் கடுமையாக விமர்சித்தனர்.
ஆணாதிக்கம் மற்றும் பெண்கள் மீதான வன்முறை போன்றவை இப்படத்தின் காட்சிகளாக வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று அனிமல் படம் வெளியானது. இந்த படத்தை தியேட்டரில் பார்க்காதவர்கள் பலரும் முதல் நாளே ஓடிடி தளத்தில் பார்த்தனர். தொடர்ந்து அனிமல் படம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சகட்டுமேனிக்கு திட்டு பதிவுகளை வெளியிட தொடங்கினர். ஓடிடி தளத்துக்காக தியேட்டரில் இடம்பெறாத காட்சிகளும் இருந்த நிலையில் இப்படம் ரசிகர்களிடையே எதிர்ப்பை பெற்றுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்த பிரபலங்கள் பலரும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கும் ஒரு படம் ஒரு சூப்பர் ஹிட் ஆகிறது என்றால் அது மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருந்தனர். அதேசமயம் இயக்குநர் ராம் கோபால் வர்மா, நடிகைகள் த்ரிஷா, அலியா பட், அல்லு அர்ஜூன் இந்த படத்தை பாராட்டி பதிவுகளை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.