தமிழ் சினிமா மூன்று தலைமுறைகளாக பல மாற்றங்களை அடைந்திருக்கிறது. அதில் கடந்த இரண்டு தலைமுறை மாற்றங்கள் குறிப்பிடத்தகுந்தவை . இந்த காலக்கட்டங்களில் எப்போதுமே முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் நடிகை ராதிகா. இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். 


பாரதி ராஜாவின் நாயகி :


தமிழ் சினிமாவின் ஸ்டீரியோ டைப்பை உடைத்த இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவின் அறிமுகம்தான் ராதிகா .  1978 ஆம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் இரயில் திரைப்படத்தில் வெகுளியான , பட பட பட்டாம்பூச்சியாக , முகம் நிறைந்த புன்னகையோடு  நடித்திருந்தார். அப்பா எம்.ஆர். ராதா தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தாலும் , ராதிகா தனக்கான அங்கீகாரத்தை போராடி பெற்றவர். முதல் படமான கிழக்கே போகும் இரயில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது . இதனால் பாரதிராஜா இயக்கிய அடுத்த படத்திலும் இவரையே நாயகியாக்கினார். அதுதான் நிறம் மாறாத பூக்கள் . இந்த படத்தில் ராதிகா மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தவே , பாக்கியராஜ்,எஸ்.பி.முத்துராமன் ,பாலச்சந்தர் என அனைத்து முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமானார்.





முன்னணி நாயகி :


பாக்கியராஜ் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியான இன்று போய் நாளை வா திரைப்படம்தான் ராதிகாவின் சினிமே கெரியரையே மாற்றிய திரைப்படம் . பொதுவாக கதாநாயகிகள் என்றாலே டூயட் பாடல்களுக்கு நடனமாட வேண்டும் , காதல் காட்சிகளில் நடிக்க வேண்டும் பிறகு சில அழுகாட்சி காட்சிகள் என இருந்த நிலையில் படம் முழுக்க காமெடிகளால் நிறைத்திருந்தார் பாக்கியராஜ். அதில் பெரும்பங்கினை ராதிகாவை நம்பியே ஒப்படைக்க , அவரும் அசால்ட்டாக நடித்து அசத்தியிருந்தார். அந்த  படத்தில் ராதிகா வெகுவாக பாராட்டப்படவே , அடுத்தடுத்து ரஜினி , கமல் என  உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து 80-களில் முன்னணி நடிகையாக இருந்தார்.





கேரக்டர் ஆர்டிஸ்ட் :


முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ராதிகாவை   அடுத்தக்கட்ட பரிணாமத்திற்கு அழைத்துச்சென்றவரும் பாரதிராஜாதான்.  1993 ஆம் ஆண்டு வெளியான கிழக்கு சீமையிலே திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் அத்தனை எளிதாக மறந்திருக்க முடியாது.அந்த படத்தில் வயதானவராக நடித்திருந்த ராதிகாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அந்த படம் இவரின் குணச்சித்திர நடிப்பிற்கு அஸ்திவாரமாக இருந்தது.அதன் பிறகு பொறுப்புமிக்க கதாபாத்திரங்கள் ராதிகாவை தேடி வந்தது. வரவு எட்டணா செலவு பத்தனாவில் குழந்தைகளின் தாயாகவும் , பொறுப்பான மனைவியாகவும் நடித்திருந்தார், அதன் பிறகு சூர்ய வம்சம் , நான் பெத்த மகனே, ஜீன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியவர் . தற்போது முன்னணி நடிகர்களின் அம்மாவாக நடித்து அசத்தி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு உள்ளிட்ட பிறகு மொழிகளிலும் ராதிகா முக்கியமான நடிகை.




தயாரிப்பாளர்: 


ராதிகா நடிகை என்பதை தாண்டி பல படங்களை , சீரியல்களை ராடன் மீடியா என்னும் பெயரில் தயாரித்து வருகிறார். ராதிகா 1985 ஆம் ஆண்டு முதன் முதலாக தயாரித்த மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படம் தேசிய விருதை பெற்றது. அந்த படத்திற்கு பிறகு நிறைய சீரியர்களை தயாரித்து நடித்தவர் ஜித்தன்', 'மாரி'  போன்ற படங்களையும் தயாரித்திருக்கிறார்.


ஒரு நடிகை சினிமாவிலும் சீரியலிலும் ஒரே மாதிரியான மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்கிறார் என்றால் அது நடிகை ராதிகா மட்டுமே !