ராதிகா சரத்குமார்


கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை ஏற்படுத்தி அதிர்ச்சியைத் தொடர்ந்து நடிகை ராதிகா சரத்குமார் மலையாள திரையுலகினர் மீது அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை வைத்தார். படப்பிடிப்பின்போது நடிகைகள் உடை மாற்றுவதை படக்குழுவினர் ரகசிய கேமராக்கள் மூலமாக பார்த்ததாக அவர் தெரிவித்திருந்தார்.  தற்போது தான் நடிக்கும் புதிய சீரியல் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த ராதிகா தனது கருத்து குறித்து விளக்கமளித்தார்.


"நான் மலையாளத்தில் ஒரு படத்தில் வேலை செய்தபோது இப்படி எல்லாம் நடந்தது உண்மைதான். ஆனால் எனக்கு மொழி தெரியாத காரணத்தினால் அந்த விஷயம் தொடர்பாக நான் எந்த வித புகாரும் கொடுக்கவில்லை. அந்த இடத்தில் என்னால் எப்படி கையாள முடியுமோ அதை நான் கையாண்டிருக்கிறேன். நடிகர் மோகன்லால் என்னிடம் ஃபோன் செய்து என்னுடைய படப்பிடிப்பின்போது இப்படி நடந்ததா என்று கேட்டார். இது எந்த படப்பிடிப்பில் நடந்தது என்று நான் சொல்ல விரும்பவில்லை. இதில் நிறைய பெரிய நடிகர்கள் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள். ஆனால் நான் இதை எல்லாம் பேசுவது வருங்காலத்தில் வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கவேண்டும் என்பதற்காக தான். 


இன்னொரு முறை ஒரு பெரிய நடிகை ஒரு பிரபல நடிகரை திருமணம் செய்திருக்கிறார். அவரைப் பற்றி தவறான கருத்துக்களை படக்குழுவினர் சொன்னதாக என்னிடம் வந்து சொன்னார். அவரது கணவரான அந்த நடிகர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அவர் இல்லாத நேரத்தில் நான் அந்த படக்குழுவினரை கடுமையாக திட்டிவிட்டேன். நான் ஒரு செட்டில் இருக்கும்போது அங்கு தவறு நடந்தால் அதை தட்டி கேட்டிருக்கிறேன். 


சினிமாவிற்கு நடிக்க வரும் பெண்களுக்கு கழிப்பறை வசதியோ, பாதுகாப்பான கேரவன் எல்லாம் ஏற்படுத்தி தருவது என்பது படத்தின் தயாரிப்பாளரின் வேலை. அவர்களுக்கு ஏதாவது பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்டால் அவர்கள் புகாரளிப்பதற்கு ஏற்ற வகையில் நம்பகத் தன்மையான ஆட்களால் நிர்வகிக்கப்படும் ஒரு குழு அமைக்க வேண்டும் என்று நான் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். 


ஹேமா கமிட்டியில் சில குறைகள் இருக்கின்றன. தனக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளை வெளியே சொல்லும் முன் பெண்கள் தங்கள் மனதில் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் தெரியுமா?


இந்த இரண்டு நாட்களில் நான் தொடர்ச்சியாக நிறைய பேட்டிகளில் பேசியிருக்கிறேன். தங்களுக்கு நிகழ்ந்ததை பெண்கள் சொல்லும்போது அந்த ஆண் யார் என்று தெரிந்துகொள்வதில் நான் உங்களுக்கு ஆர்வம். இதுபற்றி என்ன செய்வது என்று யாரும் கேட்கவில்லை. சின்மயி உட்பட எல்லா பெண்கள் மீது தான் குறை சொல்கிறார்கள். ஆனால் அந்த ஆண்களை யாராவது ஒருத்தராவது ஏதாவது சொல்லி இருக்கிறீகளா.  ஆண்கள் நிறைய தவறுகள் செய்கிறார்கள். ஆனால் சமூகம் இந்த ஆண்களை தான் மேல தூக்கி வைத்து கொண்டாடுகிறது.


இது தான் இந்த சமூகத்தின் பெண்களின் மிகப்பெரிய தோல்வி. ஊடகத்துறையினரான நீங்களும் நான் பேசும் கருத்துக்களை விட்டுவிட்டு விஷாலுக்கு சவால்விட்ட ராதிகா என சம்பந்தம் இல்லாத ஒரு டைட்டில் வைக்கிறீர்கள். இந்த மாதிரியான விஷயத்திற்கு நீங்களும் தான் பெண்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்”


ஹேமா கமிட்டியின் அறிக்கையில் ஒரு பக்கத்தையே காணவில்லையாம். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஆதராம் கேட்கிறார்கள். அப்போ நான் என்னை ரேப் செய்யும்போது செஃல்பி எடுத்துக்கொண்டா இருக்க முடியும். உடனடியாக நடவடிக்கை எடுப்பது மட்டும் தான் அந்த இடத்தில் அந்த பெண்ணிற்கு தைரியம் கொடுக்கும் “ என ராதிகா பேசினார்.