தமிழ் திரையுலகில் முதல் படம் மூலமாக அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் அசத்தலாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது சிவகார்த்திகேயனுடன் டான் படத்திலும் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் சி.பி சக்ரவர்த்தி இயக்கியுள்ள டான் திரைப்படம் வருகிற மே மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர ரஜினிகாந்தின் அடுத்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க உள்ளதாகவும் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறியியல் பட்டதாரியான நடிகை பிரியங்கா மோகன் தனது சினிமா கெரியர் மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார். “நான் பெங்களூரில்தான் பிறந்து வளர்ந்தேன் ஆனால் தமிழ் பொண்ணுதான். என்னை பற்றி நிறைய மீம் வீடியோக்களை பார்க்க முடிஞ்சுது. அதெல்லாம் நான் வேணும்னே சொன்னது கிடையாது. அதெல்லாம் உண்மை. நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத கேள்விகள்தானே. அந்த பதில் அப்படி அமைஞ்சுடுது. நான் தமிழ் படங்களில் நடிப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லை. அதெல்லாம் ஆசிர்வாதம்” என்றார்
ராஜேஷ்..
ஜீவா நடித்த 'சிவா மனசுல சக்தி' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ராஜேஷ். முழுக்க முழுக்க காமெடி ஜானர் படமாக அவர் உருவாகியிருந்த இந்தப்படத்தில், இப்போதைய தலைமுறைக்கான காதலை ராஜேஷ் கையாண்டிருந்த விதமும், இடையில் வந்த அம்மா செண்டிமெண்டும் மக்களுக்கு பிடித்திருந்தது. அதைத்தொடர்ந்து பாஸ் என்ற பாஸ்கரனிலும், ஒரு கல் ஒரு கண்ணாடியிலும் அதே காமெடி ஃபார்முலாவை பிடித்த ராஜேஷ் ஹிட் கொடுத்தார்.
அதற்கடுத்தபடியாக இவரது இயக்கத்தில் வந்த “ஆல் இன் அழகுராஜா”, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, “ கடவுள் இருக்கான் குமாரு” உள்ளிட்ட படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்தது. இதற்கடுத்த படியாக இவர் சிவகார்த்திகேயனோடு மிஸ்டர் லோக்கல் படத்தில் இணைந்தார். இந்தப்படமும் அட்டர் ப்ளாப் ஆனது. அடுத்ததாக, இவரது இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் “வணக்கம் டா மாப்ள” தோல்வி அடைந்தது. இந்த நிலையில்தான் இவர் ஜெயம் ரவியுடன் இணைய இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.