இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றுமொரு நாயகி பிரியாமணி. இன்று அவருக்கு 39 ஆவது பிறந்தநாள்


கண்களால் கைது செய் என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகர் பிரியாமணி. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தின் அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. ஆனால் படம் மிகப்பெரியத் தோல்வி. இதனைத் தொடர்ந்து இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய அது ஒரு கனா காலம் திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்தார் பிரியாமணி. இந்தப் படமும் தோல்வியை சந்தித்தது என்றாலும் தனது நடிப்பிற்காக பரவலான பாராட்டுக்களைப் பெற்றார் பிரியாமணி. தமிழில் அவர் நடித்த இரண்டு படங்களும் தோல்வியடைந்தாலும் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவர் நடித்தப் படங்கள் நல்ல வெற்றிகளை வழங்கின.


பின் 2006 ஆம் ஆண்டு அமீர் இயக்கிய பருத்தி வீரன் திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார் பிரியாமணி. முத்தழகு என்கிற கதாபாத்திரத்தின் நடித்த பிரியாமணி அந்த கதாபாத்திரத்தில் வேறு யாரையும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு தனது நடிப்பால் அசத்தியிருந்தார்.மேலும் இந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்  பிரியாமணி. இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் அவர் நடித்த திரைக்கதா என்கிற படத்திற்காக ஃபிலிப்பேர் விருதையும் வென்றார். தமிழில் தொடர்ந்து மலைக்கோட்டை தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும்  உள்ளிட்டப் படங்களில் நடித்தார். பின் மணிரத்னம் இயக்கிய ராவணன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார்.


பருத்திவீரன் படத்தைப் பார்த்த இயக்குனர் ராம் கோபால் வர்மா அவரை ரத்தச் சரித்திரம் படத்தில் நடிக்க தேர்வுசெய்தார்.தமிழைக் காட்டிலும் தெலுங்கு கன்னடம் மலையாள மொழிப் படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்தார் பிரியாமணி. அவரது பயணம் வெற்றி தோல்வி என ஏற்ற இறக்கங்களால் நிறைந்தது. சிலகாலம் படங்களில் காணப்படாத பிரியாமணி சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாடலில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றி கலக்கிவிட்டு சென்றார். மொத்தம் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிரியாமணி.


பிரியாமணி தமிழ் ரசிகர்களிடம் தனது  நல்ல கதாபாத்திரங்களின் வழியாக நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர். அவரை ரசிகர்கள் மேலும் பருத்திவீரன் மாதிரியான அழுத்தமாக கதாபாத்திரங்களில் பார்க்கதான் விரும்பினார்கள். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களாக கருதப்படும் பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம் அமீரையும் சேர்த்துக்கொள்ளலாம் ஆகிய மூன்று இயக்குனர்களும் பிரியாமணியிடம் கண்ட அழகையும் அவரது நடிப்பின் ஆற்றலையும் மற்ற எந்த இயக்குனரும் சரியாக பயன்படுத்த முயற்சிக்கவில்லை. மாறாக பருத்திவீரன் படத்தில் அவரது வெற்றியைத் தொடர்ந்து அவரை வழக்கமான ஸ்டார் ஹீரோயின்களிடம் எதிர்பார்த்த இமேஜையே இவரிடமும் கொண்டுவர முயற்சித்தார்கள். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில்  நடிப்பதற்கு அவருக்கு கிடைத்த வெகு சில வாய்ப்புகளில் தனது திறமையை முழுதாக வெளிக்காட்டியிருக்கிறார் பிரியாமணி. அவருக்கு பிறந்தநாள்  வாழ்த்துக்கள்.