தமிழ் சினிமாவில் ஒரு தமிழ்ப் பெண்ணாக த்ரிஷாவுக்கு பின் பெரும் புகழ் பெற்றுள்ளவர் நடிகை பிரியா பவானி சங்கர்தான். 

செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தைத் தொடங்கி, நிகழ்ச்சி தொகுப்பாளர் டூ சீரியல் நடிகை டூ தமிழ் சினிமா எண்ட்ரி என வளர்ச்சிப் பாதையில் பயணித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக தற்போது வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான பிரியா தன் அறிமுகப் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்.

தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மாஃபியா, ஓ மணப்பெண்ணே, மான்ஸ்டர் படங்களின் மூலம் கவனமீர்த்ததுடன் தமிழ் பேசத் தெரிந்த தமிழ் ஹீரோயினாகவும் கோலிவுட் ரசிகர்களை ஈர்க்கத் தொடங்கினார்.

சென்ற ஆண்டு மட்டும் யானை, திருச்சிற்றம்பலம், குருதி ஆட்டம், ஹாஸ்டல் உள்ளிட்ட படங்களில் ஆகிய படங்களிலும் விக்டிம் எனும் வெப் சீரிஸிலும் நடித்ததுடன் கமல்ஹாசனுடன் இந்தியன் 2, எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை,சிம்புவுடன் பத்து தல, டிமாண்டி காலனி 2, அகிலன், ருத்ரன் என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிப்பது தவிர்த்து, புத்தகங்கள் படிப்பது, உலக நாடுகளை சுற்றிப் பார்ப்பது உள்ளிட்டவற்றில் பெரும் ஆர்வம் கொண்ட பிரியா, தொடர்ந்து தன் இன்ஸ்டா பக்கத்தில் தான் உலகம் சுற்றும் படங்களைப் பதிவிட்டு லைக்ஸ் அள்ளி வருகிறார்.

இந்நிலையில் நடிப்பு, ஹாபீஸ் எல்லாம் தாண்டி தற்போது மற்றுமொரு சீரியஸ் அவதாரம் எடுத்துள்ளார் பிரியா. அதன்படி லயம்ஸ் டின்னர் எனும் புதிய ஹோட்டல் ஒன்றைத் தொடங்கி பிஸ்னஸ் வுமன் அவதாரம் எடுத்துள்ளார் பிரியா.

 

இது குறித்து தன் சமூக வலைதளப் பக்கங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள பிரியா பவானி சங்கர், பிப்ரவரி 1ஆம் தேதி மாம்பாக்கத்தில் தன் கடை திறக்கப்படும் என்றும் தெரிவித்து அதற்கான அழைப்பிதழையும் பகிர்ந்துள்ளார்.

தொழில் முனைவர் ஆவதையும் ஹோட்டல் தொடங்குவதையும் தன் குறிக்கோளாகக் கொண்ட பிரியா ஏற்கெனவே அதனைக் குறிப்பிட்டே வந்துள்ளார். தற்போது அதற்கான முதல் அடியை பிரியா எடுத்து வைத்திருக்கும் நிலையில் அவரது நண்பர்களும் ரசிகர்களும் தொடர்ந்து அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.