பீமன அமாவாசையை முன்னிட்டு நடிகை பிரணீதா அவரது கணவருக்கு பாத பூஜை செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 


பீமன அமாவாசையும் பிரணீதாவும்


நம்மூரில் எப்படி ஆடி மாதத்தில் வரும் அமாவாசை முக்கியமானதாக கருதப்படுகிறதோ, அந்த மாதிரி கர்நாடகாவில் ஆடி மாதத்தின் அமாவாசை பீமன அமாவாசையாக கருதப்படுகிறது. இந்த நாளானது பார்வதியின் பக்தியால் கவரப்பட்ட சிவன், அவரை மனைவியாக ஏற்றுக்கொண்ட தினமாக நம்பப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் விரதம் இருந்து கணவருக்கு பூஜை செய்வார்கள். 


அந்த வகையில் நடிகை பிரணீதாவும் இந்த பூஜையை மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘பீமன அமாவாசையை முன்னிட்டு இன்று காலை பூஜை நடைபெற்றது. இது ஆணாதிக்கத்தின் ஒரு நிகழ்வாக இருக்கலாம் (கடந்த ஆண்டு நடந்த சம்பவங்களை குறிப்பிட்டு சொல்கிறேன்). ஆனால் எனக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சனாதன தர்மத்தில், பெரும்பாலான சடங்குகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதற்கு ஒரு கதை உள்ளது.மேலும் இந்து சமய சடங்குகள் ஆணாதிக்கத்தனமானது என்று வாதிடுவது முற்றிலும் ஆதாரமற்றது. இது பெண் தெய்வங்களை சமமாக வழிபடும் சில நம்பிக்கைகளில் ஒன்றாகும் என தெரிவித்திருந்தார். பிரணீதாவின் இந்த கருத்துக்கு இணையத்தில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. 


கடந்த ஆண்டு நடந்த கலவரம் 


இதே பீமன அமாவாசையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கடந்தாண்டு பிரணீதா பதிவிட்டிருந்தார். அந்த போட்டோவில் அவரது கணவர் சேரில் அமர்ந்திருக்க, பிரணீதா தரையில் அமர்ந்து காணப்பட்டார். இதனைப் பார்த்த இணையவாசிகள் கடுமையாக பிரணீதாவை விமர்சித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பேட்டி ஒன்றில் பல விஷயங்களை வெளியிட்டார்.


அதில், “நான் ஒரு நடிகை என்பதால் என் மதம் சார்ந்த சடங்குகளை பின்பற்றமாட்டேன் என்பது அர்த்தமல்ல. நான் எப்பொழுதும் பாரம்பரியமான பெண் தான். அதனால் பாரம்பரியம், நம்பிக்கைகள் மற்றும் குடும்பம் தொடர்பான விஷயங்களை பின்பற்றுகிறேன். சனாதன தர்மம் என்பது மிகவும் அழகான கருத்தாகும். இது அனைவரையும் நெருக்கமாக்குகிறது. இதை நான் உறுதியாக நம்புகிறேன் என கூறியிருந்தார்.


தமிழில் சகுனி, உதயன், மாஸ் என்கிற மாசிலாமணி, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட படங்களில் பிரணீதா நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த ஆண்டு பெண்குழந்தையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. .