பிரக்யா நாக்ரா
கடந்த சில மாதங்கள் முன்பாக இணையத்தில் ஓவியாவின் படுக்கை அறை வீடியோ என வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகை பிரக்யா நாக்ராவின் தனிப்பட்ட வீடியோ என்று ஒரு வீடியோ காட்டுத்தீப் போல் பரவி வருகிறது.
ஜீவா நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான வரலாறு முக்கியம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரக்யா நாக்ரா. ஹர்யானாவைப் பின்புலமாக கொண்டிருந்தாலும் தனது நடிப்பு கரியரை தொடங்க தமிழ் சினிமாவை தேர்ந்தெடுத்தார். தமிழில் அவர் நடித்த முதல் படமே தோல்வியை சந்தித்தாலும் தொடர்ந்து மலையாள மற்றும் தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகள் வந்தபடி உள்ளன. மலையாளத்தில் வெளியான நதிகளில் சுந்தரி யமுனா படத்தில் நடித்தார். தெலுங்கில் இந்த ஆண்டு வெளியான லக்கம் படத்தில் நடித்தார்.
பிரக்யா நாக்ரா விளக்கம்
கடந்த இரண்டு நாட்களாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டும் பேசப்பட்டும் வரும் நிலையில் தற்போது இது குறித்து வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார் பிரக்யா நாக்ரா ." எனக்கு இன்னும் ஏதோ ஒரு கெட்ட கனவில் இருப்பது போல் இருக்கிறது. டெக்னாலஜி நம் வாழ்க்கையை மேம்படுத்த கண்டுபிடிக்கப்பட்டது இப்படி நாசமாக்க இல்லை. ஏஐ மூலம் இந்த மாதிரியான செயல்களை செய்பவர்களைப் பார்த்து பரிதாபமாக தான் இருக்கிறது. இந்த மாதிரியான நேரத்தில் நான் மன உறுதியுடன் இருக்க முயற்சிக்கிறேன். எனக்கு ஆதரவு தெரிவித்து என் பக்கம் நின்றவர்களுக்கு நன்றி. எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நடக்கக் கூடாது என வேண்டிக்கொள்கிறேன். " என தனது எக்ஸ் பக்கத்தில் பிரக்யா நாக்ரா பதிவிட்டுள்ளார்
கடந்த ஆண்டு நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது அடுத்தடுத்து இரு நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த மாதிரியான வீடியோக்களை உருவாக்குபவர்களை சைபர் கிரைம் போலீஸ் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நெட்டிசன்கள் மத்தியில் வலுத்துள்ளது.