தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பூர்ணா. 2004ம் ஆண்டு வெளியான "மஞ்சபோல் ஒரு பெண்குட்டி" என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமான பூர்ணா, தன்னுடைய 20 ஆண்டு திரைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.


'சவரக்கத்தி' படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யாவின் இயக்கத்தில் மிஷ்கின் இசையமைப்பில் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள 'டெவில்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் பூர்ணா. இப்படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட நடிகை பூர்ணா தன்னுடைய திரைப்பயணம் குறித்தும், அவர் படங்களை தேர்வு செய்வது குறித்தும் வெளிப்படையாக பேசி இருந்தார். 


 



கேரக்டர் ரோல் பிடிக்கும் :


ஆதித்யா இயக்கிய சவரக்கத்தி படத்திலும் நான் தான் ஹீரோயினாக நடித்தேன். நான் சினிமாவில் நுழையும் போது ஹீரோயினாக நுழையவில்லை. சைட் கேரக்டரில் தான் நடித்து வந்தேன். அதனால் என்னால் ஹீரோயின் அல்லாத கேரக்டர் ரோலில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. நான் நடிக்கப்போகும் கேரக்டர் எப்படி அது எனக்கு பிடிச்சு இருக்கா, அத மட்டும் தான் பார்ப்பேன். ரொமான்ஸ் பண்றது, டூயட் பாடுறதுலாம் முடிஞ்சுடுச்சு. சில சமயங்களில் கேரக்டர் ரோலில் நடிக்கும்போது நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. 


மோசமான கமெண்ட்:


கல்யாணத்துக்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் குறைந்து விடும் என எதிர்பார்த்தேன், ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. என்னுடைய கணவர் எனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு உடல் அதிகமா வெய்ட் போட்டுட்டேன். நிறைய பேர் கேலி செய்து கமெண்ட் போஸ்ட் பண்ணுவாங்க. குழந்தை பெற்றவர்களுக்கு உடம்பு அப்படி தான் இருக்கும் என்பதை கூட அவர்கள் புரிந்து  கொள்வதில்லை. அதனால் தான் நிறைய ஹீரோயின்கள் குழந்தை பெற்ற பிறகு பிரேக் எடுத்துக்கொண்டு பிறகு உடல் ஸ்லிம் ஆனதுக்கு பிறகு நடிக்க வராங்க. நான் குழந்தை பிறந்த 50வது நாள் ஷூட்டிங் வந்தேன். 


தன்னம்பிக்கை கொடுத்த மிஷ்கின் :  


நான் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருப்பதற்கு முக்கியமான காரணம் மிஷ்கின் சார் தான். அவர் தான் எனக்கு நிறைய தன்னம்பிக்கை கொடுப்பார். “நீ உடல் பருமனா இருந்தாலும் சரி, ஸ்லிம்மாக இருந்தாலும் சரி நடிக்கிறதை மட்டும் விட்டுடாத” என சொல்வார். ஹீரோயின்னா இப்படிப்பட்ட கேரக்டரில் தான் நடிக்கணும் என்பதை உடைத்து, எப்படி நல்ல கேரக்டர்களை தேர்வு செய்யணும் என்பதை புரிய வைத்தவர் அவர்தான். அவர் முதல் முறையாக இசையமைக்கும் 'டெவில்' படத்தில் நான் நடிப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். 


 



பர்சனல் கனெக்ட் :


'சவரகத்தி' படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக கர்ப்பிணியாக நடித்தேன். அப்படத்திற்காக ஒரு கர்ப்பிணியாக நடிக்க வேண்டும் என என்னுடைய மேனரிசம் எல்லாத்தையும் மாறிக்கொண்டேன். அப்படத்தில் நடித்த பிறகு நான் சீக்கிரம் கர்ப்பிணியாக வேண்டும் என ஆசைப்பட்டேன். அந்த அளவுக்கு மிகவும் பிடித்து நடித்த படம். அதே போல 'டெவில்' படத்தில் நடிக்கும்போது தான் எனக்கு கல்யாணம் ஆச்சு. நான் கர்ப்பமாகவும் ஆனேன்.  கிளைமாக்ஸ் சீன் ஷூட்டிங் சமயத்தில் எனக்கு ஏழு மாசம். டீமில் இருந்த எல்லாருமே என்னை அவ்வளவு அக்கறையோடு பத்திரமா பாத்துக்கிட்டாங்க. எல்லாரும் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிகிட்டாங்க. அதனால் இந்தப் படம் எனக்கு ரொம்ப பர்சனலான படம். 


குடும்பம், குழந்தை என ஆகிவிட்டது. அதனால் பொறுப்புகளும் அதிகமாகிவிட்டது. இருந்தாலும் நல்ல கேரக்டர்கள் வந்தால் நிச்சயமாக நடிப்பேன்” எனப் பேசி இருந்தார் நடிகை பூர்ணா.