திருச்சி மாவட்டம், சிறுகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாடு நடைபெறுகிறது. விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சாரியா, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் இரா. முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் , கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ. ஆர். ஈஸ்வரன், சி.பி.ஐ.எம்.எல் மாநில செயலாளர் பழ.ஆசைதம்பி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன் உள்ளிட்ட அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் அழகிரி பேசுகையில், "மன்னர்கள் ஆட்சி காலத்தில் சர்வாதிகாரம் தான் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தான் அரசியலில் சமத்துவம் வந்தது. ஆனால் சமூக வாழ்க்கையில் சமத்துவம் வரவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக அதற்காகத்தான் போராடி வருகிறோம். 5000 ஆண்டுகள் ஏற்படுத்த முடியாத சமத்துவத்தை கடந்த 70 ஆண்டுகளில் கொஞ்சம் சாதித்துள்ளோம். ஜனநாயகத்தின் மூலம் தான் அனைவருக்கும் சமூகநீதியை ஏற்படுத்த முடியும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை ஜனநாயகத்தால் தான் ஏற்படுத்த முடியும். எல்லா காலங்களிலும் அநீதியை எதிர்த்து சமத்துவத்திற்காக போராடி கொண்டு இருக்கிறோம்.
எந்த ஒன்றையும் நாம் எளிதாக பெற்று விட முடியாது ,எதுவும் எளிதாக நமக்கு கிடைத்துவிடவில்லை. தனி மனிதனுக்கு எதிரானவர்கள் இல்லை, நாம் மக்களுக்கும்,கொள்கைகளுக்கும் எதிரானவர்கள். பலரின் தியாகத்தால் நாம் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பெற்றுள்ளோம். ஆனால் இன்று மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் ,கடவுளின் பெயரால், இந்த நாட்டிலே ஒரு புரட்சியை ஏற்படுத்த முடியும் என சிலர் கருதுகிறார்கள். அதற்காக அவர்கள் எல்லா விதமான தகிடுதத்தங்களையும் பயன்படுத்துகிறார்கள். பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு வெற்றி பெற்றுள்ளது, இந்தியா கூட்டணியும் வெற்றி பெறும்" என்றார்.