கர்ப்பப்பை புற்றுநோயால் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட நடிகை பூனம் பாண்டே தான் உயிரோடு இருப்பதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியான பூனம் பாண்டே 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் எனக் கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார். தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு ‘நஷா’ எனும் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இதற்கிடையில் சர்ச்சைக்குரிய நடிகையாக திரையுலகில் வலம் வந்த பூனம் பாண்டே, நேற்று கர்ப்பைப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியானது. இது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
32 வயதான பூனம் பாண்டே உயிரிழந்தது தொடர்பான செய்தி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் புரட்டி போட்டது. பலராலும் இந்த தகவலை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. சிலர் இது பொய் எனவும் கூறி வந்தனர். இந்நிலையில் தான் உயிரோடு இருப்பதாக பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டுள்ளார்.
முக்கியமான ஒன்றை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் . நான் இங்கே உயிருடன் தான் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்னைக் கொல்லவில்லை. ஆனால் சோகம் என்னவென்றால், இந்த நோயை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய அறிவு இல்லாததால் இந்நோய் ஆயிரக்கணக்கான பெண்களின் உயிரைக் கொன்றுள்ளது. மற்ற புற்றுநோய்களைப் போலல்லாமல், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் முற்றிலும் தடுக்கக்கூடியது. HPV தடுப்பூசி மற்றும் ஆரம்பகால கண்டறிதல் சோதனைகளில் இதில் முக்கியமானது. இந்த நோயினால் யாரும் உயிரை இழக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் உள்ளன. விமர்சன விழிப்புணர்வுடன் ஒருவரையொருவர் மேம்படுத்தி ஒவ்வொரு பெண்ணும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வோம்" என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை கண்டு இணையவாசிகள் பலரும் பூனம் பாண்டேவை திட்டி தீர்த்து வருகின்றனர். விழிப்புணர்வு வீடியோ என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? என கேள்வியெழுப்பி வருகின்றனர்.