நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டாவது அலை மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்று பாதிப்பு உள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டிலும் நேற்று 31 ஆயிரம் பேர் கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இந்தச் சூழலில் மத்திய மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக முகக்கவசம் அணிவது, கை கழுவது உள்ளிட்டவற்றை மீண்டும் மக்களிடம் கொண்ட செல்ல அரசு சில பிரபலங்களை பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பதிவில் பல்ஸ் ஆக்சிமீட்டர் பயன்படுத்துவது எப்படி என்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், "நான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் தனிமை படுத்தப்பட்டிருந்த போது என்னுடைய ஆக்சிஜன் அளவை கண்காணிக்க சொன்னார்கள். ஆனால் அப்போது அதை எப்படி கண்காணிப்பது என்று எனக்கு தெரியவில்லை. அதை எனக்கு மருத்துவர்கள் கற்று தந்தனர். அதை தற்போது நான் பதிவிட்டுள்ளேன். இந்த பெருந்தொற்றை போராட என்ற சிறிய தகவலும் தேவையற்றதில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" எனக் கூறி வீடியோவை பதிவு செய்துள்ளார்.
விஜய் 65 படத்தின் கதநாயாகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதியானது. அதன்பின்னர் வீட்டில் தனிமை படுத்தப்பட்டிருந்தார். தற்போது அவர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைந்த பிறகு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். ஏற்கெனவே சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளில் நடிகர் கார்த்தி, நடிகை மாளவிகா மோகன் ஆகியோர் பயன்படுத்தப்பட்டனர். பிரபலங்கள் பலரும் தன்னார்வமாக மேற்கொள்ளும் இது போன்ற முயற்சிகள் விரைவில் மக்களை சென்றடைகிறது. அந்த வகையில் இந்த முயற்சியும் மக்களிடம் சென்றடைய வாய்ப்புள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஆக்ஸி மீட்டர் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை பலரும் உணர்ந்துள்ளனர். அதிலும் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் கூறும் ஆலோசனைகள் இன்னும் முக்கியத்துவம் பெறுகின்றன.