நடன இயக்குநர் அமீரின் பிறந்தநாளுக்கு அவரின் காதலியும், நடிகையுமான பாவ்னி ரெட்டி பதிவிட்டுள்ள பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ரெட்டைவால் குருவி' சீரியலின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பாவ்னி ரெட்டி. தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி சீரியலிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சின்னத்தம்பி’ சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து பாவ்னி கலந்து கொண்டார். முன்னதாக காதல் கணவரின் தற்கொலையால் மன அழுத்தத்தில் இருந்ததே அவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரணமாக அமைந்தது.
இப்படியான நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் வந்த நடன இயக்குநர் அமீர், ஆரம்பம் முதலே பாவ்னியுடன் நெருங்கி பழக தொடங்கினார். பாவ்னிக்கு முத்தம் கொடுத்தது, அவரை காதலிப்பதாக கூறியது தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் இருவரும் சர்ச்சையில் சிக்க தொடங்கினர். அமீரின் காதலை பாவ்னி ஏற்றுக்கொள்ளாத நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இருவரும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்றனர்.
இதற்கிடையில், பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் அமீர்- பாவ்னி இருவரும் இணைந்து நடனமாடினர். ஒரு கட்டத்தில், தான் அமீரை கல்யாணம் செய்தால் முதல் கணவருக்கு நிகழ்ந்த மாதிரி ஏதாவது அசம்பாவிதம் அமீருக்கும் நடந்து விடுமோ என நினைப்பதாக கூறியிருந்தார். இப்படியான நிலையில் அந்த நடன நிகழ்ச்சியில் அமீர்-பாவ்னி ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. இதனையடுத்து இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், அமீரின் காதலை ஏற்றுக் கொள்வதாகவும், இருவரும் வாழ்க்கை பயணத்தை தொடங்குவதாகவும் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் இந்த ஜோடி அஜித் நடித்த துணிவு படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தனர். இப்படியான நிலையில் அமீர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை பாவ்னி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “என்னுடைய ஒரே சூப்பர்மேன், மிகவும் ஸ்ட்ராங்கான அயர்ன்மேன், என்னுடைய ஹீரோ, ஹேண்ட்சம், எனது உலகத்தை முழுமைப்படுத்தும் நபருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நான் உன்னிடம் உணரும் அன்பை யாருடனும் ஒப்பிட முடியாது” என தெரிவித்துள்ளார். காதல் என்று வந்து விட்டால் சூப்பர் மேன், ஸ்பைடர்மேன் என சொல்லுவீங்களா? என சில இணையவாசிகள் காமெடியாக தெரிவித்துள்ளனர்.