தமிழில் பூ படம் மூலம் அறியப்பட்டவர் பார்வதி. சமீப ஆண்டுகால மலையாள சினிமாவை பார்வதியை தவிர்த்து யாராலும் எழுத முடியாது. வெறுமனே கவர்ச்சிக்கும், பாடலுக்கும் தான் நாயகி என்ற கதையெல்லாம் மலையாளத்தில் இல்லை. அதனை இறுகப்பற்றிக்கொண்ட ஒரு நடிகர்தான் பார்வதி. பார்வதியின் படங்களில் பெரும்பான்மை படங்களை அவரே தாங்கிச் செல்வார். சென்னையில் ஒருநாள், உத்தமவில்லன் என தமிழிலும் கவனிக்க வைத்தார். இந்நிலையில் சில ஆண்டுகளாக பார்வதி குண்டாக ஆகிவிட்டதாகவும், உணவுக்கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதாகவும் சிலர் விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தன் உடல் எடை அதிகரிப்பு குறித்தும், தான் புலிமியா நோயால் பாதிக்கப்பட்டது குறித்தும் உணர்ச்சிபூர்வமான பதிவொன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
புலிமியா என்பது ஒருவகை கட்டுப்பாடற்ற உணவு உண்ணும் நோயாகும். ஆரோக்கியமற்ற, கட்டுப்பாடற்ற உணவால் உடல் எடை அதிகரிப்பது இந்த நோயின் ஆரம்பகால தாக்கமாக இருக்கும். பின்னர் இதனால் உடல் உபாதைகளும் ஏற்படும்.
இந்நிலையில் இது குறித்து பதிவிட்டுள்ள பார்வதி, ''நான் சில வருடங்களாக என்னுடைய சிரிப்பையே கட்டுப்படுத்திவிட்டேன். நான் சிரித்தால் என் முகம் குறித்தும், குண்டான என் தாடைகள் குறித்தும் கருத்துகள் வரும். அதனால் என் சிரிப்பை நான் நிறுத்திக்கொண்டேன். சில ஆண்டுகளாக என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன்.
நான் வேலையின் போதும், மற்ற நிகழ்ச்சிகளின் போதும் தனியாகவே சாப்பிட்டேன். ஏனென்றால் என் தட்டில் எவ்வளவு சாப்பாடு இருக்கிறது என சிலர் நோட்டமிட்டனர். என் சாப்பாட்டை குறைத்துக் கொள்ளவும் அவர்கள் கூறுவார்கள். அதற்கு பின் என்னால் மேலும் ஒருவாய் உணவையும் விழுங்க முடியாமல் போகும்.
எடை குறைய வேண்டும்,
உங்கள் உணவைக் கட்டுப்படுத்த வேண்டும்,நீங்கள் மரியான் பட கால பார்வதியாய் மாற வேண்டும்...
போன்ற வர்ணனையிலிருந்து என் உடலின் ஒரு அம்சமும் தப்பவில்லை. நான் அதை மிகவும் உள்வாங்கிக்கொண்டு அதை மதிப்பீடு செய்தேன். நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள எவ்வளவு முயற்சி செய்தாலும், இந்த வார்த்தைகள் இறுதியில் எனக்குள் புகுந்தன
நான் இங்கு வர பல வருடங்கள் ஆனது. சில அற்புதமான நண்பர்கள், ஒரு அற்புதமான உடற்பயிற்சி பயிற்சியாளர் மற்றும் சிகிச்சையாளர்களின் உதவியுடன், நான் மீண்டும் ஒரு முழு புன்னகையுடன் சிரிக்கிறேன். தயவுசெய்து உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடம் ஒதுக்குங்கள் .. அப்படியாகவே இருங்கள். உங்கள் நகைச்சுவைகள், உங்கள் வர்ணனைகள், மற்றவர்களின் உடல்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை திணிக்காதீர்கள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.