தமிழ் சினிமாவின் ஒரு சில நடிகைகள் அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துவிடுவார்கள். அப்படி தவமாய் தவமிருந்து, பட்டியல், சத்தம் போடாதே, பொக்கிஷம், தங்க மீன்கள், மிருகம், முரட்டு சிங்கம் என தன்னுடைய கேரக்டருக்கு அதிக வெயிட்டேஜ் உள்ள கதாபாத்திரங்களாக தேர்வு செய்து அதில் தனது யதார்த்தமான நடிப்பால் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பத்மப்ரியா. அவர் இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


 



2004ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'சீனு வசந்தி லட்சுமி' என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தமிழில் தவமாய் தவமிருந்து திரைப்படம் மூலம் அறிமுகமானார். தமிழை காட்டிலும் மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமின்றி பெங்காலி, பஞ்சாபி என 18 பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அது மட்டுமின்றி இந்த அனைத்து மொழிகளிலுமே அவர் சரளமாக பேசக்கூடியவர் என்பது தனிச்சிறப்பு.


நடிப்பை தாண்டி அவர் ஒரு தேர்ந்த பரதநாட்டிய கலைஞர் மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்துள்ளார். ஏராளமான பட்டப்படிப்பை பயின்றவர். படிக்கும் போது மாடலிங் மீது அவருக்கு ஆர்வம் இருந்தாலும் நடிப்பின் மீது பெரிய அளவு விருப்பம் இல்லை. அவரின் நண்பர்கள் பலர் மீடியாவில் இருந்ததால் வலுக்கட்டாயமாக பத்மப்ரியாவை நடிப்பு துறைக்கு அழைத்து வந்தார்கள். அப்படி அவர் முதலில் அறிமுகமான தெலுங்கு திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஆனால் அதை தொடர்ந்து அவர் மலையாளத்தில் நடிகர் மம்மூட்டி ஜோடியாக நடித்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவே பத்மப்ரியாவுக்கு கொஞ்சம் நடிப்பின் மீது ஆர்வம் வந்தது. 


 



சேரன் ஜோடியாக தமிழில் அவர் அறிமுகமான 'தவமாய் தவமிருந்து' படத்தில் அவரின் யதார்த்தமான நடிப்பிற்காக 'சிறந்த நடிகை க்ரிட்டிக்ஸ்' என பிரிவில் மாநில விருது, பிலிம்பேர் விருது என விருதுகளை குவித்தார். அப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமுமே மிகவும் வித்தியாசமாக சவாலாக அமைத்தது. வொண்டர் வுமன் என்ற ஆங்கில படத்திலும் நடித்துள்ளார் பத்மப்ரியா. 


2014ம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் நண்பர் ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான பிறகு ஒரு பிரேக் எடுத்து கொண்டு மீண்டும் சினிமாவுக்குள் ரீ என்ட்ரி கொடுக்க தயாராக இருக்கிறார். அவரின் முந்தைய படங்களில் என்ன செய்தார் என்பது இல்லாமல் இனி என்ன செய்யப்போகிறார் என்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். தமிழ் ரசிகர்கள் மீண்டும் பத்மப்ரியாவை திரையில் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.