நயன்தாரா
2003-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மன்சின்னகரே படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. 2005-ஆம் ஆண்டு சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். சந்திரமுகி , கஜினி ஆகிய படங்களில் துணைக்கதாபாத்திரங்களில் நடித்த நயன்தாரா தனக்கான ஆடியன்ஸை உருவாக்கினார். அடுத்தடுத்து வெளியான பாஸ் என்கிற வல்லவன் , யாரடி டீ மோகினி உள்ளிட்ட படங்கள் இவரது மார்கெட்டை பெரிதுபடுத்தின. கடந்த 20 இருபது ஆண்டுகளாக தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் நயன்தாரா கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
முன்னணி நடிகர்களில் படங்கள் தவிர்த்து இவர் சோலோவாக நடித்த கோலமாவு கோகிலா , ஐரா , அறம் ஆகிய படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன. நடிப்பு தவிர்த்து ரவுடி பிக்ச்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் சார்பாக நிறைய படங்களையும் தயாரித்து வருகிறார்.
நயன் என்கிற சொந்த பிராண்ட் ஒன்றை சமீபத்தில் தொடங்கிய நயன்தாரா தனது வணிகத்தை விரிவுபடுத்த பல்வேறு முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறார்.
பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து நயன்தாரா
நயன்தாரா தனது அழகை அதிகரிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுவது வழக்கம். தொடக்க காலத்தில் இருந்த நயன்தாராவுக்கும் தற்போது இருக்கும் நயன்தாராவின் தோற்றத்தில் நிறைய மாற்றங்கள் இருப்பதை இதற்கு காரணமாக தெரிவிக்கிறார்கள். தற்போது நயன் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
"எந்த ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போதும் என்னுடைய புருவத்தை அழகுபடுத்திக் கொள்வது என்னுடைய வழக்கம். என்னுடைய புருவத்தை நிறைய மாதிரி நான் அழகுபடுத்தி இருக்கிறேன். அதனால் தான் மக்கள் என் முகத்தை நான் ஏதோ செய்துவிட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. இது வெறும் டயட் தான். என்னுடைய உடல் எடையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன். அதே நேரம் என்னுடைய் கன்னங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. என் கன்னத்தை கிள்ளியும் பார்க்கலாம், எரித்தும் பார்க்கலாம்" என நயன்தாரா பதிலடி தெரிவித்துள்ளார்.
நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வது ஏன்?
கடந்த 10 ஆண்டுகளில் நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் வழக்கம் அதிகரித்துள்ளது. எல்லா நடிகைகளும் இதை விருப்பபப்பட்டு செய்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. திரைத்துறையில் நீடிக்க வேண்டும் என்றால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளவேண்டும் என்கிற நிலைக்கு சிலர் தள்ளப்படுவதும் உண்டு . தன்னை பலர் மார்பக மாற்று சிகிச்சை செய்துகொள்ளும் படி கட்டாயப்படுத்தியதாக சமீபத்தில் நடிகை சமீரா ரெட்டி தெரிவித்திருந்தார். குறையே சொல்ல முடியாத அழகு என்று திரைத்துறை நடிகைகளுக்கு சில விதிகளை தீர்மானிக்கிறது. இந்த பொதுவரையறைகளுக்குள் வராத நடிகைகள் அழகாக கருதப்பட மாட்டார்கள் என்கிற புரிதல் பல நடிகைகளிடமே உள்ளதைப் பார்க்கலாம்.