அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகையும், பாஜக பிரமுகருமான நமீதா கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான களத்தில் அனல் பறக்க தினமும் காலை முதல் இரவு வரை அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். சரியாக 10 நாட்கள் மட்டுமே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவுக்கு உள்ள நிலையில் சினிமா பிரபலங்களும் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிக்கு வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை நமீதா பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
இவர் நேற்று திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அரசியல் சார்ந்து பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது.
கேள்வி: தமிழகத்தில் திமுக கூட்டணி ரொம்ப பலமா இருக்கும்போது, அதை பாஜக எப்படி எதிர்கொள்ளும்?
பதில்: இன்னைக்கு வரைக்கும் திமுகவில் யாரோ ஒருத்தராவது வெளியே வந்து 234 தொகுதிகளுக்கும் சென்று ஒவ்வொரு மக்களையும் சந்தித்து அவர்களின் அடிப்படை தேவை என்னவென்று கேட்டீருக்கிறார்களா?. பாஜகவின் தலைவர் அண்ணாமலை அதை செய்தார். அதனால் அவர் பாதயாத்திரை மேற்கொண்டார். அதை தாண்டி நமக்காக யார் வேர்வை, இரத்தம் சிந்துகிறார்கள் என்று தமிழ்நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக பாஜக வெற்றி பெறும்.
கேள்வி: விஜய் கூட அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்தீர்கள். இப்ப அவரு கட்சி தொடங்கி விட்டாரே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: முதலில் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் அவர் மிகவும் திறமையானவர். ஒரு புத்திசாலி நம் போட்டியாளராக இருக்க வேண்டும். அது நன்றாக இருக்கும்.
கேள்வி: நீலகிரி தொகுதியில் பாஜகவின் செல்வாக்கு எப்படி இருக்கிறது?
பதில்: கண்டிப்பாக நீலகிரி தொகுதியில் பாஜக தான் ஜெயிக்கும். எல்.முருகன் வெற்றி பெறுவார். தமிழ்நாட்டில் பாஜக வீடு, தண்ணீர், மருத்துவமனை என எல்லா வசதிகளும் செய்துக் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு முன்னால் 50 ஆண்டுகள் இங்கு ஆண்ட கட்சி எந்தவித வசதியும் செய்து கொடுக்கவில்லை.
கேள்வி: அமலாக்கத்துறை சோதனை எல்லாம் நடக்குது. ஊழலை ஒழிக்க தமிழ்நாட்டில் பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுப்பார் என நினைக்கிறீர்கள்?
பதில்: இதுபோன்ற சோதனை நடப்பது நல்ல விஷயம் தானே. உள்ளே இருப்பது எல்லாம் வெளியே வரும் என நடிகை நமீதா கூறியுள்ளார்.