நடிகை மும்தாஜ் இஸ்லாமியர்களின் புனித பூமியான மெக்கா மற்றும் மதினாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வீடியோக்களை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


தமிழ் சினிமாவின் பன்முக கலைஞராக திகழும் இயக்குநர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான படம் “மோனிஷா என் மோனாலிசா”. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மும்தாஜ். அதன்பின்னர் மலபார் போலீஸ், பட்ஜெட் பத்மநாபன் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் 2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘குஷி’ படம்தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. 






இந்த படத்தில் இடம் பெற்ற கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல் அன்றைய தினம் பல இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்தது என சொல்லலாம். அதன்பின்னர் மும்தாஜின் அடையாளமாக மாறிப்போனது சாக்லேட் படத்தில் இடம் பெற்ற “மலை..மலை..மருதமலை” பாடல் தான். தொடர்ந்து சத்யராஜ், அர்ஜூன், ராகவா லாரன்ஸ், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் துணை நடிகையாகவும், ஒரு பாடலுக்கு நடனமாடுபவராகவும் மும்தாஜ் தமிழ் சினிமாவில் வலம் வந்தார். 


இதன் பின்னர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனிலும் மும்தாஜ் பங்கேற்றிருந்தார். இதற்கிடையில் சினிமாவில் இருந்து விலகி இருக்கும் அவர் தற்போது இஸ்லாமியர்களின் புனித பூமியான மெக்கா மற்றும் மதினாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்  வீடியோக்களை சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நான் மெக்காவில் இருக்கிறேன். என்னிடம் எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என சொன்ன அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன். 






இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை. மேலும் அல்லா நாங்கள் செய்த அனைத்து தவறுகளை மன்னித்து கெட்டதில் இருந்து அனைவரையும் காப்பாற்றுங்கள். மகிழ்ச்சியான வாழ்க்கையை தாருங்கள் என கண்ணீர் மல்க பிராத்தனை செய்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.