நடிகை மீரா மிதுனை காணவில்லை என அவரது அம்மா போலீசில் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்த மீரா மிதுன், கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் தனது பேச்சால் சர்ச்சைகளில் சிக்கிய அவர் வெளியே வந்தும் நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்களை வம்பிழுத்து அவர்களது ரசிகர்களிடம் வாங்கி கட்டினார். இதனைத் தொடர்ந்து பட்டியலின மக்கள் குறித்து மீரா மிதுனும், அவரது நண்பர் சாமும் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டனர்.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை தொடங்க இருந்த நிலையில் சாம் மட்டும் விசாரணைக்கு ஆஜரானார். ஆனால் நடிகை மீராமிதுனோ தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். இதனால் எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது மீராமிதுன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதாகவும், அவர் பயன்படுத்திய ஒரு மொபைலும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தற்போது மீரா மிதுன் எங்கிருக்கிறார் என தெரியவில்லை எனவும், அவரது குடும்பத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது மகள் மீரா மிதுனை சில நாட்களாக காணவில்லை என்று அவரது தாயார் ஷியாமளா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.