எல்லா நேரத்திலும் தவறு செய்பவர் ஆண் அல்ல என நடிகர் ரவிமோகனுக்கு ஆதரவாக பிரபல நடிகை மீரா சோப்ரா ட்வீட் வெளியிட்டுள்ளார்.
விவாகரத்தை அறிவித்த ரவி மோகன்
தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவை எடுத்துக் கொண்டாலே விவாகரத்து செய்யும் பிரபலங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரு காலத்தில் ரசிகர்களால் நட்சத்திர தம்பதிகளாக கொண்டாடப்பட்ட பலர் இன்றைக்கு பிரிந்து அடுத்தக்கட்ட வாழ்வை நோக்கி நகர்ந்துவிட்டனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ரவி மோகன், கடந்த 2024ம் ஆண்டு தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் இருவரின் பிரிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த பிரிவுக்கு காரணம் பாடகி கெனிஷாவுடன் பழகுவது தான் என ஆர்த்தி தெரிவித்திருந்தார். ஆனால் தான் மனைவி மற்றும் அவரது குடும்பத்தால் கொடுமைப்படுத்தப்பட்டதால் இந்த முடிவுக்கு வந்ததாக ரவிமோகன் கூறினார். இவர்களின் விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஓராண்டாகவே ரவிமோகன் - கெனிஷா இருவரும் பல்வேறு இடங்களுக்கும் ஒன்றாக சென்று வருகின்றனர்.
கெனிஷா வைத்த குற்றச்சாட்டு
இப்படியான நிலையில் தன் மீது சைபர் தாக்குதலை ஆர்த்தி நடத்தியதாக கெனிஷா தெரிவித்திருந்தார். மேலும் சிறுவயதிலேயே தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கதையையும், சிறு வயதிலேயே நடைபெற்ற திருமணத்தில் கருவில் இருந்த குழந்தையை இழந்த கதையையும் தெரிவித்திருந்தார். பல போராட்டங்களை சந்தித்த நான் எப்படி ரவி மோகன் குடும்பத்தை கெடுப்பேன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் ரவி மோகன் ஒன்றும் குழந்தை இல்லை. அவர் முடிவெடுக்கக்கூடியவர். என்னை ஏன் இந்த பிரச்னையில் இழுக்கிறீர்கள்? என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரவிமோகனுடனான காதலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
மனைவி மீது கண்ணீர் மல்க புகார்
இந்த நிலையில் ரவிமோகன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து மனைவி ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல குற்றச்சாட்டுகளை கண்ணீர் மல்க தெரிவித்தார். அப்போது 3 எழுத்து இட்லி நடிகையும் இந்த பிரச்னைக்கு காரணம் என அவர் சொல்ல, குஷ்பு தான் என பலரும் கணித்தனர். அடுத்த சில நிமிடங்களில் ரவிமோகன் பெயரை குறிப்பிடாமல் குஷ்பு விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டார். தொடர்ந்து ஆர்த்தி, அவரது அம்மா சுஜாதா விஜயகுமார் ஆகியோரும் உண்மையை நிரூபிப்போம் என கூறியுள்ளனர். இந்த நிலையில் ரவிமோகன், ஆர்த்திக்கு ஆதரவாக பலரும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
ரவிமோகனுக்கு பிரபலங்கள் ஆதரவு
அந்த வகையில் அன்பே ஆருயிரே, இசை, ஜாம்பவான், மருதமலை, லீ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நிலா. இவரின் உண்மையான பெயர் மீரா சோப்ரா. இவர் தன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஜெயம்ரவியை எனக்கு தெரியும் . நான் தென்னிந்தியத் திரைப்படங்களில் பணியாற்றியபோது இவரை எனக்கு நன்றாகவே தெரியும். இப்போதுதான் இவருடைய விவாகரத்து செய்திப் பற்றி படித்தேன். என் கருத்து என்னவென்றால், எல்லா நேரத்திலும் தவறு செய்பவர் ஆண் அல்ல. பெண்களுக்குச் சாதகமாக இருக்கும் சட்டங்களைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதை நான் காண்கிறேன். ஒரு ஆணின் குரலும் கேட்கப்பட வேண்டும். எனக்கு அவரை மிகவும் இனிமையான மற்றும் எளிமையான மனிதராகத் தெரியும். அவர் தனது உண்மையையும் நீதியையும் கண்டடைவார் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.
இயக்குநர் மோகன் ஜியும் தனது பதிவில், “முழுத் தொழில்துறைக்கும் உங்களைப் பற்றி தெரியும். ரவிமோகன் நீங்கள் ஒரு நல்ல உள்ளம் கொண்டவர். உங்கள் மன அமைதிக்காகப் பிரார்த்திக்கிறேன். உண்மையான உணர்வுகளை அறிந்தவர்கள் உங்களுக்குத் துணையாக நிற்பார்கள். மன உறுதியுடன் இருங்கள் ஐயா. உங்களுக்கு நல்லதே நடக்கும்” என தெரிவித்துள்ளார்.
