நடிகர் திலகம் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட செவாலிய சிவாஜி கணேசன் என்றும் நடிகர்களுக்கு ஒரு பல்கலைக்கழகமாக திகழ்பவர். தன்னுடைய அசத்திய நடிப்பால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சிவாஜி கணேசனின் 23வது நினைவு தினம் இன்று.
நடிப்புக்கு அடையாளமாக விளங்கிய சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் பல நடிகர்களுக்கும் கிடைத்துள்ளது. அது அவர்களின் வாழ்க்கையில் ஒரு பொக்கிஷமான நாட்கள். அப்படி அந்த வாய்ப்பு பெற்ற நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மீனா. நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினத்தில் நடிகை மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அவரை நினைவு கூர்ந்து புகைப்படத்துடன் பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று வரை கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் நடிகை மீனா. 1982ம் ஆண்டு மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில், விஜயகுமார் தயாரிப்பில் சிவாஜி கணேசன், லட்சுமி, மஞ்சுளா, விஜயகுமார், தேங்காய் ஸ்ரீனிவாசன், தியாகராஜன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான திரைப்படம் 'நெஞ்சங்கள்'. இப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் மகளாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை மீனா.
'நெஞ்சங்கள்' படத்தில் நடிகர் சிவாஜி கணேசனுடன் நடிக்க ஒரு குழந்தை நட்சத்திரம் தேவைப்பட்டது. எந்த குழந்தையும் அதுவரையில் செட் ஆகவில்லை என்றதால் தேடுதல் வேட்டை நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள தன்னுடைய அம்மாவுடன் வந்து இருந்தார் மீனா. அப்போது தான் மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் சிவாஜி கணேசன் கண்ணில் மீனா பட அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மீனா அம்மாவும் உடனே சம்மதம் தெரிவித்துள்ளார். சினிமா, நடிப்பு எல்லாம் என்ன என தெரியாத சமயத்திலேயே மீனாவுக்கு சிவாஜி கணேசனுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
நடிகர் திலகத்துடன் தன்னுடைய மலரும் நினைவுகளை போஸ்ட் மூலம் பகிர்ந்து மீனா "பழம்பெரும் சிவாஜி கணேசன் அப்பா அவர்களின் நினைவு நாள். 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே தமிழ் நடிகர். இந்திய சினிமாவில் என்னை அறிமுகப்படுத்தியதற்காக நான் அவருக்கு என்னுடைய ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் நன்றியுடன் பெருமையுடன் இருப்பேன்!" என பகிர்ந்து இருந்தார் நடிகை மீனா.