சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்த மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
இதனிடையே கணவர் வித்யாசாகருக்கு ஏற்கனவே இருந்த நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 28 ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவரின் இறப்புக்கு பிறகு வெளியே தலைக்காட்டாமல் இருந்த நடிகை மீனா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.
கணவரின் மறைவுக்குப் பிறகு சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் கணவரின் இறப்பு குறித்தும் அதிலிருந்து தான் இன்னும் மீளவில்லை என்றும் கூறியிருந்தார். நேர்காணலின்போது தொகுப்பாளர் கணவரின் மறைவு ஏற்படுத்திய துக்கத்திலிருந்து எவ்வாறு மீண்டு வந்ததாக கேள்வி எழுப்பினார். நான் ஒரு நடிகை என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள் என்று குறிப்பிட்டு, அந்த துக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை என்பதை நடிகை மீனா பதிவிட்டார். மேலும் இதிலிருந்து வெளிவர தனது நண்பர்கள் பெரிதும் துணை நிற்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகை மீனா. அந்த வீடியோவில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது தோழிகளுடன் மகிழ்ச்சியாக ஆடி பாடி கொண்டாடிய நிகழ்வை பதிவு செய்துள்ளார்.மேலும் தனது தோழியுடன் இருக்கும் புகைப்படங்களையும் அதில் இணைத்துள்ளார். வீடியோ பதிவின் கீழ் ஒரு இன்ஸ்டாகிராம் ரீல் செய்வதற்கு பின் இருக்கும் கடின உழைப்பு இது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன் தீபாவளி அன்று, நடிகை மீனா ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.