கேரளத்தின் தென் மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம் மூணாறு. கடல் மட்டத்திலிருந்து 1600–1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. தென்னகத்து காஷ்மீர் என மூணாறு அழைக்கப்படுகிறது. மூணாறு நகரமும், அதைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்களும் சேர்ந்தே மூணாறு என அழைக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியே இங்குள்ள முக்கியமான தொழில் ஆகும். முதிரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் கூடுமிடமாதலால், மூன்றாறு என்றிருந்து மூணாறாகியுள்ளது. உலக மக்களைக் கவரும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் முகில்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சியாகும். உதகமண்டலம், கொடைக்கானலிற்குப் பிறகு, தீபகற்ப இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ்பெற்ற கோடை வாழிடம் மூணாறு. 


நீங்கள் மூணாறு செல்கிறீர்கள் என்றால் இந்த இடங்களை தவறாமல் பார்த்துவிடுங்கள்:


1. தேயிலைத் தோட்டத்தை தவறவிடாதீங்க..


மூணாறு முழுவதுமே பச்சைப்பசேலன தான் இருக்கும். திரும்பிய பக்கமெல்லாம் தேயிலைத் தோட்டங்கள் தான் இருக்கின்றன. தேயிலைத் தோட்டங்களும் அதன் பசுமையும் உங்கள் மனதிற்கு இதம் தரும். மேலும் அங்குள்ள தேயிலை தொழிற்சாலைகளை நீங்கள் சுத்திப் பார்க்கலாம். சில தொழிற்சாலைகள் பார்வையாளர்களை அனுமதிப்பதே இல்லை. சில தொழிற்சாலைகள் அனுமதிக்கும். அங்கிருந்து நீங்கள் நினைவுப் பரிசாக ஃப்ரெஷாக தயார் செய்யப்பட்ட தேயிலை தூள் வாங்கிச் செல்லலாம்.


 2. இரவிக்குளம் தேசிய பூங்கா


இரவிக்குளம்  தேசியப் பூங்காவானது மூணார் மலைவாசஸ்தலத்தை ஒட்டி மேற்குத்தொடர்ச்சி மலையில் 97 ச.கி.மீ பரப்பளவுக்கு பரந்து விரிந்து காணப்படுகிறது. பல்லுயிர்ப்பெருக்கச் சூழல் நிறைந்ததாக கருதப்படும் இந்த இயற்கைப் பூங்கா வனப்பகுதி மற்றும் காட்டுயிர் பராமரிப்பு துறையின் கட்டப்பாட்டின் கீழ் உள்ளது. நீலகிரி தார் எனப்படும் வரையாடு இந்த பூங்காவில் அதிகமாக வசிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேசியப் பூங்காவோடு சின்னார் வனப்பகுதி மற்றும் இந்திரா காந்தி காட்டுயிர் சரணாலயம் போன்றவை இணைந்து ஒட்டுமொத்தமாக மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியிலுள்ள மிகப்பெரிய காட்டுயிர் பாதுகாப்பு சரகமாக விளங்குகின்றன. அதுமட்டுமல்லாமல் பல முக்கியமான ஆறுகளின் நீர்பிடிப்புப் பகுதியாகவும் இந்த வனப்பகுதி திகழ்கிறது.இந்த தேசியப்பூங்காவில் 26 வகையான பாலூட்டிகளும், 132 வகையான பறவை இனங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இனப்பெருக்க காலமான ஜனவரி-பிப்ரவரி மாதங்களிலும், மழைக்காலத்திலும் இந்த பூங்காவுக்கு பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களே இங்கு செல்வதற்கு சிறந்த மாதங்களாகும். திங்கள் முதல் வெள்ளி வரை 8 மணி முதல் 4 மணி வரையும் சனிக் கிழமைகளில் காலை 8.30 மணி முதல் 4 மணி வரையும் பூங்கா திறந்திருக்கும்.


3. மூணாரில் ஃபன் பார்க் ஒன்று உள்ளது. இது நிச்சயமாக உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். அதுமட்டுமல்லாமல் மூணாறில் நிறைய நீர்வீழ்ச்சிகள் உள்ளன. அதுதவிர ஜீப் சஃபார், ரோப் ஆக்டிவிட்டிஸ், பக்கி ரெய்டு ஆகியனவும் செல்லலாம்.


4. மூணாரில் உள்ள ஆயுர்வேத ஸ்பா தனிச்சிறப்பானவை. அங்கே அப்யங்கா, ஷிரோதரா, ஜாவர்கிஜி என மூன்று விதமான ஆயுர்வேத சிகிச்சைகள் இருக்கின்றன.


5.ஆட்டுக்கல் என்ற இடம் இங்குள்ள நீர்வீழ்ச்சிக்காக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மூணாரிலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஸ்தலம் நடைபயணிகளுக்கும் பிக்னிக் பிரியர்களுக்கும் பிடித்தமான ஒன்றாகவும் திகழ்கிறது. மூணாரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது பள்ளிவாசல் நீர்வீழ்ச்சி மிகச்சிறியதாக இருந்தாலும் மிகப்பிரசித்தமான ஒன்றாகும். சீதா தேவி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த நீர்விழ்ச்சி தேவிகுளம் பகுதியில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சம். மேட்டுப்பட்டி அணை செல்லலாம்.  


இவையெல்லாம் அனுபவிக்க விரும்பினால் உடனே மூணாறுக்கு ஒரு ட்ரிப் ப்ளான் பண்ணுங்க.