நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு நுரையீரல் மற்றும் இருதயம் ஏற்கெனவே செயலிழந்து இருந்தநிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


அவருக்கு உறுப்புகள் கிடைக்காமல் போகவே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை. எக்மோ கருவியில் உயிர் வாழ்ந்து வந்த அவர் உடலின் பிற உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழந்து போக சிகிச்சை பலனின்றி காலமானார். 


48 வயதாகும் வித்யாசாகரின் மறைவு மீனாவின் ரசிகர்களையும், திரையுலகைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, வித்தியாசாகரின் உடல் இன்று மதியம் 2 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.


நடிகை மீனா கணவர் வித்யாசாகரின்  மரணத்திற்கு பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். நடிகை மீனா வீட்டிற்கு நடிகை ரம்பா முதல் ஆளாய் வந்தார். அவரை தொடர்ந்து நடன இயக்குநர் கலா மாஸ்டர், குணசித்திர நடிகை லட்சுமி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று துக்கத்தில் பங்கெடுத்து வருகின்றனர். 


மேலும், பலர் கொரோனா பரவல் காரணமாக இரங்கல்களை சமூக வலைத்தளம் வாயிலாக நடிகை மீனாவுக்கு தெரிவித்து வருகின்றனர். 


மீனாவின் சினிமா பக்கம் : 


குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகம் மீனாவை அறிமுகப்படுத்தியது என்றால், அவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தியது தெலுங்கு சினிமா தான். ராஜேந்திரபிரசாத் நடிப்பில் 1990ல் உருவான நவயுகம் திரைப்படம் மூலமாக நாயகியாக அறிமுகமானார். அதே ஆண்டில் பாலசுப்பையா இயக்கிய ஒரு புதிய கதை என்ற திரைப்படத்தில் நடிகர் பிரபுராஜுக்கு கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் மீனாவை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது கஸ்தூரி ராஜா இயக்கி 1991ல் வெளிவந்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் தான். நடிகர் ராஜ் கிரணுக்கு ஜோடியாக சோலையம்மா என்ற கதாப்பாத்திரத்தில் மீனா நடித்திருந்தார். இது தான் தமிழ்சினிமாவில் மீனாவிற்கு முக்கிய இடத்தைப் பெற்றுக்கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இது தெலுங்கிலும் மொரட்டொடு நா மொகுடு என்ற பெயரில் 1992ல் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் மீனா தான் நாயகியாக நடித்தார்.


தெலுங்கிலும் பெரும் வெற்றிபெறவே அடுத்தடுத்து வாய்ப்புகள் மீனாவுக்கு குவிந்தன. 1995ல் மட்டும் பத்து திரைப்படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார் மீனா. தமிழில் வெளியான எஜமான், சேதுபதி ஐபிஎஸ், வீரா, தாய் மாமன், நாட்டாமை, மாமன் மகள், கூலி, நாடோடி மன்னன், அவ்வை சண்முகி, பொற்காலம், வானத்தைப் போல, ரிதம் போன்ற படங்கள் அதிரிபுதிரி ஹிட் அடித்தவை.  தென்னிந்திய சினிமாவில் மீனா ஜோடி சேராத நடிகரே இல்லை எனலாம். தமிழ்சினிமாவில் விஜயுடன் நடிக்கவில்லை என்ற குறை 2001ல் வெளியான ஷாஜகான் திரைப்படத்தில் இடம்பெற்ற சரக்குவச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் என்ற பாடல் மூலம் தீர்க்கப்பட்டது. 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண